எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: ஆக.21-ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு

By KU BUREAU

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. ஆகஸ்ட் 19-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 21-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2024-2025-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இணையதளங்கள் மூலம் விண்ணப்பிப்பது நேற்று (ஜூலை 31) காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆக.8-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தகவல்தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்துவிவரங்களும் இணையதளங்களில் கொடுக்கப்பட் டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு முதல் சுற்று ஆக. 14-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரைநடைபெறுகிறது. அகில இந்திய கலந்தாய்வு தொடங்கிய பின்னர்தான் மாநிலங்கள், 85 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.அந்த வகையில் தமிழகத்தில் ஆக.21-ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கப் படும்.

முன்னதாக, 19-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறும். தொடர்ந்து, விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, மாற்றுத்திறனாளி ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும்.

இதையடுத்து, பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதியஇடங்களில் சேர்க்கை இல்லை. 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்கள் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE