“கவலை வேண்டாம்... மீண்டும் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம்: கோவை மாநகராட்சி ஆணையர் அறிவுரை

By டி.ஜி.ரகுபதி

கோவை: மாநகராட்சிப் பள்ளியில் படித்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் முழு ஈடுபாட்டுடன் படித்து மறுதேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார் கோவை மாநகராட்சி ஆணையர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வினை 563 மாணவர்கள், 1,068 மாணவிகள் என மொத்தம் 1,631 பேர் எழுதினர். இதில் 490 மாணவர்கள், 1,010 மாணவிகள் என 1,500 பேர் தேர்ச்சி பெற்றனர். மீதம் உள்ளவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத மாணவ, மாணவிகளுக்கான சிறப்புக் கூட்டம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் இன்று (மே 20) நடந்தது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், ''மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வகுப்புகள் கடந்த 10-ம் தேதி முதல் பள்ளி ஆசிரியர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் 26-ம் தேதி நடைபெற உள்ள மறு தேர்வில் முழு ஈடுபாட்டுடன் படித்து எழுதி தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்களின் மேற்படிப்பைத் தொடர வேண்டும். கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாததாகும். கல்வி மட்டுமே இறுதி வரை நம்முடனே இருக்கும். எனவே, கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகள் அளித்து வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும்'' என்றார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், ஆசிரியர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடையாத மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE