சென்னை: பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் பள்ளிகளில் உறுதிச்சான்றிதழ் பெற அணுகும் போது அவைகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.அதற்காக, அந்த மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் உறுதிச்சான்றிதழ் (Bonafide Certificate) பெறுவதற்கு பள்ளியை அணுகும் போது அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது.
மாணவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பள்ளியிலும், 9 முதல் 12-ம் வகுப்புகளை வேறு பள்ளியிலும் பயின்றிருக்கும் நிலையில் கடைசியாக பயின்ற பள்ளியில் இருந்து மேற்கண்ட சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிகிறது.
எனவே இதுபோன்று வெவ்வேறு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சார்பான விவரங்களை எமிஸ் தளத்திலிருந்து பெற்று அதனடிப்படையில் உறுதிச்சான்றிதழை எவ்வித தாமதமின்றி உடனுக்குடன் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கிடுமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
» மாதம் ரூ.750 உதவி தொகையுடன் மின்சார வாகன மெக்கானிக் பயிற்சி - வடசென்னை ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை
» புத்தகப் பை இன்றி பள்ளிக்கு செல்லும் திட்டம்: கேரளாவில் விரைவில் முடிவு
மேலும் மேற்கண்ட சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனே மேலொப்பம் செய்து வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.