2,768 இடைநிலை ஆசிரியர் பணி: 25 ஆயிரம் பட்டதாரிகள் போட்டி தேர்வில் பங்கேற்பு

By KU BUREAU

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வில் 25,319 பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளில் காலியாக உள்ள 2,768 இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியிட்டது.

விண்ணப்ப பதிவு: அதைத் தொடர்ந்து இணையவழியில் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இந்த போட்டித் தேர்வை டெட் முதல் தாள் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே எழுத முடியும். அந்த வகையில் இத்தேர்வை எழுதுவதற்கு டெட் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 26,510 பேர் விண்ணப்பித்தனர்.

வினாத்தாள் கடினம்: இதற்கிடையே, இடைநிலை ஆசிரியர் பணித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் நிர்வாக காரணங்களுக்கான தேர்வு ஜூலை 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி போட்டித் தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 25,319 பட்டதாரிகள் வரை எழுதினர்.

தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும், கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in/ எனும் வலைத்தளம் வழியாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE