இந்திய காவல் சேவை எனப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவிகளில் 864 காலியிடங்கள் உள்ளன என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணி ஓய்வு, பதவி விலகல், இறப்பு, பணி நீக்கம் போன்ற காரணங்களால் பணியிடங்கள் காலியாகின்றன. ஜனவரி 1, 2022 நிலவரப்படி, ஐபிஎஸ் அதிகாரிகளின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை 4,984 ஆக உள்ளது. ஆனால் தற்போது இதில் 4,120 ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமே பதவியில் உள்ளனர் என்று மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், திமுக எம்பி கவுதமன் சிகாமணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
முன்னதாக, மத்திய பணியாளர்கள் துறைக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், டிசம்பர் 14 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 1,472 இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகள் மற்றும் 1,057 இந்திய வன சேவை (IFS) அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிட்டார். ஜனவரி 1, 2022 நிலவரப்படி மொத்த ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கை 6,789 ஆகவும், மொத்தமுள்ள ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான பணியிடங்கள் 3,191 ஆகவும் இருந்தது. அதில் தற்போது 5,317 ஐஏஎஸ் அதிகாரிகளும், 2,134 ஐஎப்எஸ் அதிகாரிகளும் பதவியில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.