அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்!

By காமதேனு

அரசு பள்ளிகளில் மாணவ மாணவியரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் அங்கமாக, பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக சென்னையின் மாநகராட்சி பள்ளிகளில் இவை செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன.

பள்ளி வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் மாணவர் பாதுகாப்பினை உறுதி செய்வது, தனியார் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. தனியாருக்கு நிகராக அரசு பள்ளிகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளின் அங்கமாக, அரசு பள்ளிகளிலும் கேமராக்களை நிறுவ அரசு முடிவு செய்தது. அண்மைக்காலமாக எழுந்துவரும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கீன புகார்களை எதிர்கொள்ளவும் பள்ளி வளாகங்கள் கூடுதல் கண்காணிப்பை கோரியுள்ளன.

முன்னோட்ட நடவடிக்கையாக சென்னையின் மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சிக்கு உட்பட்ட 159 பள்ளிகளில் சுமார் ரூ4.65 மதிப்பீட்டில் 636 கண்காணிப்பு கேமராக்கள் இதுவரை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 29 மேல் நிலைப்பள்ளிகள், 37 உயர் நிலைப்பள்ளிகள், 90 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 3 ஆரம்ப பள்ளிகள் ஆகியவை அடங்கும். பாதுகாப்பான பள்ளி வளாகத்துக்கான இந்த ஏற்பாடுகள் படிப்படியாக இதர பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட இருக்கின்றன.

பொதுவளாகங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நிர்பயா திட்டத்தின் கீழ் இவை நடைமுறைக்கு வந்துள்ளன. சைபர் தடயவியல், டிஎன்ஏ ஆய்வு, பாதுகாப்பான நகரங்களை உருவாக்குதல் உள்ளிட்ட இதர ஏற்பாடுகள், நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE