சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: நடப்பு கல்வியாண்டில் ரூ.260 கோடியில் 5 லட்சத்து 47,676 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 30,897 மாணவர்கள் இந்த திட்டத்தில் பலன் பெறவுள்ளனர். தமிழகத்தில் மேல்நிலை கல்வியை ஊக்கும் வகையில் 57 வகையான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், காலை உணவு திட்டம் உலகுக்கே முன் மாதிரியாக விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, ‘‘மிதிவண்டிகளுக்கு 5 ஆண்டுகள் உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. மிதிவண்டி உபகரணங்கள் சேதமடைந்தால் அதன் விவரத்தை தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்கள் கூறினால், பழுதை சரிசெய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் மிதிவண்டிகள் வழங்கப்படும்’’ என்றார்.
» பள்ளி மாறும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் சமர்ப்பிக்க நிர்பந்திக்க கூடாது: உயர் நீதிமன்றம்
மிதிவண்டியில் ‘எமிஸ்’ எண்: விலையில்லா மிதிவண்டி களில், நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களின் ‘எமிஸ்’ எண்கள் பொறிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதனால் பலனடைய வேண்டிய மாணவர்கள் அனைவருக்கும் இலவச மிதிவண்டிகள் முழுமையாக சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. மேலும், மிதிவண்டி உதிரி பாகங்கள் சேதடைந்தால் அதை உரிய மாணவர்களுக்கு மாற்றித் தர இயலும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.