சென்னை: சென்னை திருவான்மியூரில் செயல்பட்டுவரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், கணினி இயக்குநர் மற்றும் திட்ட உதவியாளர், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பவியலாளர் ஆகிய தொழில் பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த பாடப்பிரிவுகளுக்கான 2024 மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.
அதன்படி, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மத்திய மாநில அரசு நிறுவனங்களில் பயிற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும் முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்று தரப்படும். பயிற்சியில் சேரும் அனைவருக்கும் கட்டணமில்லாபயிற்சி, மாதாந்திர உதவித் தொகையாக ரூ.750மற்றும் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு ரூ.1000,மிதிவண்டி என பல சலுகைகள் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களை 720003262, 9444247028, 8939646933 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.