சென்னையில் இன்று மாலை 5.12 மணிக்கு சூரியகிரகணம் நிகழவுள்ளது. இதனையொட்டி பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது
சென்னையில் இன்று மாலை 5.12 மணி முதல் மாலை 5.44 மணி வரை 8 சதவீதம் அளவுக்கு சூரிய கிரகணம் தெரியும். இந்த சூரியகிரகணத்தை வெறும் கண்களாலோ, தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரியகிரகணத்தை நேரடியாக பார்த்தால் கண் பார்வையை இழக்க நேரிடும் எனவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூரியகிரகணத்தை முன்னிட்டு இன்று பல கோயில்களில் நடை மூடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடை மூடப்பட்டுள்ளது, மீண்டும் இரவு 7.30 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல மதுரை மீனாட்சியம்மன் கோயில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடை மூடப்படும். திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் இரவு 7 மணி வரை நடை மூடப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் நிகழ்ந்தாலும் காரைக்கால் திருநள்ளாறு கோயில் இன்று வழக்கம்போல திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரகண நேரத்தில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.
பூமி, சூரியன், நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. உலக அளவில் இன்று சூரிய கிரகணம் மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணிக்கு முடிவடையும். ரஷ்ய நாட்டின் மத்திய பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும்.