சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நடப்பு கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்.11-ம் தேதி வரை நடைபெறும். கலந்தாய்வு முடிந்தபிறகு காலியிடங்கள் இருந்தால்அந்த இடங்களை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதைப்போல் நேரடி சேர்க்கை மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். பொறியியல் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனைஅதிகரிக்கும் வகையில் தமிழகமுதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில்தான் அதிக எண்ணிக்கையிலான கிராமப்புற மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்தார்.
இதனால், கடந்த 3 ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது உண்மை. தமிழக முதல்வர் தொடக்கக் கல்விக்கும், உயர் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன் காரணமாகத்தான் இந்தியாவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக அதாவது 52 சதவீதமாக இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
» காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம்