சென்னை: கல்வியின் தரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டுமென கல்வியாளர் பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான இ.பாலகுருசாமி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தேசிய கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கை உருவாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால், அந்த கொள்கையில் இடம் பெற்ற அம்சங்களை செயல்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. தற்போது கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1 சதவீதம் தான் செலவிடப்படுகிறது. ஆராய்ச்சிக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.69 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இது வெளி நாடுகளை ஒப்பிடும்போது கவலைக்குரியதாகவே உள்ளது. அரசின் பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமும் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடு 2 சதவீதமும் இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
» தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர்கள் நியமனம்
» அரசுப் பள்ளிகளுக்கான கணினி பயிற்றுநர்கள் நியமனத்தில் குளறுபடி - பட்டதாரிகள் சங்கம் குற்றச்சாட்டு
தற்சார்பு இந்தியா: தேசிய கல்விக் கொள்கையை திறம்பட செயல்படுத்த பல்வேறு அமைச்சகங்கள், ஒழுங்காற்று அமைப்புகள், மாநில அரசுகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைந்த திட்டமிடல்கள் தேவை. அரசின் பட்ஜெட்டில் இதற்கான சரியான கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் நிதிக்கான பொறுப்புகள் விரிவாக அறிவிக்கப்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவான ‘தன்னம்பிக்கை தற்சார்பு இந்தியா' என்ற இலக்கை அடைவதற்கு தரமான கல்வி மற்றும் புதிய ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமாகும். இதை உணர்ந்து கொண்டால் 2047-ம் ஆண்டில் நம் நாடு வளர்ந்த நாடாக மாற முடியும். இதற்கு கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்குவது அவசியமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.