அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம்: கல்லூரியில் விண்ணப்பிக்க சென்னை ஆட்சியர் அழைப்பு

By கி.கணேஷ்

சென்னை: சென்னை மாவட்டத்தில், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ''பெண் கல்வியைப் போற்றும் விதமாகவும், உயர் கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வி அறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தைச் சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக 'புதுமைப் பெண்' என்னும் திட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சமூக நலத்துறை மூலம் 'புதுமைப் பெண்' திட்டத்தில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயன்பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, வருகிற 2024-25 ம் கல்வியாண்டு முதல் 'புதுமைப் பெண்' திட்டத்தின் வாயிலாக அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தற்பொழுது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவியர் 'புதுமைப் பெண்' திட்டத்தில் பயன்பெற அந்தந்தக் கல்லூரியின் சிறப்பு அலுவலர் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்'' என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE