விபத்தில் சிக்கிய தந்தை; மாலை நேரங்களில் ஜொமோட்டோ டெலிவரி: வைரலான 7 வயது சிறுவனின் கதை!

By காமதேனு

டெல்லியை சேர்ந்த தந்தை விபத்தில் சிக்கியதால், பள்ளி முடிந்ததும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வீடு வீடாக சைக்கிள் ஓட்டிச் சென்று ஜொமோட்டோ டெலிவரி பாயாக வேலை செய்யும் 7 வயது சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ட்விட்டரில் ராகுல் மிட்டல் என்பவர் பதிவிட்டுள்ளார், இதனை 42,000க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

சுமார் 30 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ராகுல் மிட்டல் சிறுவனிடம் ஏன் இதைச் செய்கிறாய் என்று கேட்கிறார். ஒரு கையில் சாக்லேட் பெட்டியை வைத்துக்கொண்டு, சிறுவன் தனது வேலை நேரம் மற்றும் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்ய சைக்கிளைப் பயன்படுத்துவதைப் பற்றி விளக்கமாக சொல்கிறார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், "இந்த 7 வயது சிறுவன் தனது தந்தையின் வேலையைச் செய்கிறான். அவனது தந்தை விபத்தில் சிக்கியதால் சிறுவன் காலையில் பள்ளிக்குச் செல்கிறான், 6 மணிக்குப் பிறகு அவன் ஜொமோட்டோவில் டெலிவரி பையனாக வேலை செய்கிறான். இந்த பையனின் ஆற்றலை ஊக்குவித்து அவனது தந்தைக்கு ஜோமோட்டோ நிறுவனம் உதவ வேண்டும். " என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ட்விட்டர் பயனர்கள், சிறுவனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். அந்த சிறுவனின் முழு விவரத்தை பகிருமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிலர் இது தொழிலாளர் சட்டத்தை மீறுவதாக உள்ளது என சுட்டிக்காட்டினர். அதற்கு பதிலளித்த மிட்டல், ஜோமோட்டோ நிறுவனம் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு உதவ முன் வந்துள்ளது என்று கூறினார். மேலும் சிறுவனின் தந்தை மீண்டும் பணியைத் தொடங்கும் வரை அவரின் உணவு விநியோக கணக்கு முடக்கப்படும் என்றும் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE