‘இந்தியர்கள் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு செல்வார்கள்’ - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி!

By காமதேனு

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்துக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதர்கள் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு செல்வார்கள் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மனிதர்களை விண்வெளிக்கு ஏற்றிச்செல்லும் ‘ககன்யான்’ திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்று 2018-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். ஆனால் கரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக இந்த திட்டம் சற்று தாமதமானது. தற்போது 2023- ம் ஆண்டிற்குள் ‘ககன்யான்’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்,“அடுத்த ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்வார்கள். ககன்யானுக்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. அதற்கு முன்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு சோதனைகள் நடத்தப்படும். முதல் சோதனை யாரும் இன்றி நடத்தப்படும், இரண்டாவதாக வியோமித்ரா என்ற பெண் ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்படுவார். இந்த இரண்டு பயணங்களின் அடிப்படையில், நமது விண்வெளி வீரர்கள் மூன்றாவது பயணத்தில் செல்வார்கள்” என்று கூறினார்.

மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் லட்சியமான விண்வெளித் திட்டம் இது என்றும், இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை எடுத்துச் செல்ல இத்திட்டம் ஊக்குவிப்பதோடு, நாட்டிற்குள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இது பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும், பெரிய சவால்களை எதிர்கொண்டு நாட்டின் கௌரவத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

2021 டிசம்பரில் ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ககன்யான் திட்டம் மூலமாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு மனித விண்வெளிப் பயணத்தைத் தொடங்கும் உலகின் நான்காவது நாடாக இந்தியா மாறும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE