சரஸ்வதி மகாலிலிருந்து சத்தமின்றி கடத்தியது யார்?

By வீரமணி சுந்தரசோழன்

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து திருடப்பட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் அச்சடிக்கப்பட்ட சீகன் பால்க்கின் முதல் ‘பைபிள் புதிய ஏற்பாடு’ புத்தகம் தற்போது பிரிட்டன் மியூசியத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விலை மதிப்பற்ற இந்தப் புத்தகத்தை மீட்டுவர சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தற்போது மும்முரம் காட்டும் நிலையில், பைபிள் பிரிட்டனுக்குப் பயணித்த பாதையைப் பார்க்கலாம்.

பைபிளின் சிறப்பு

மதபோதகரான பார்த்தோலோமஸ் சீகன்பால்க் 1682-ல் ஜெர்மனியில் சாக்சானி எனும் நகரில் பிறந்தவர். பாலே பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், லூதரன் தேவாலயத்தில் மதபோதகராக பணியாற்றினார். அப்போது டென்மார்க் மன்னர் நான்காம் பிரடெரிக்கின் வேண்டுகோளை ஏற்று 1706-ல் கிறிஸ்துவை பரப்புவதற்காக தென்னிந்தியாவுக்கு வந்தார். அதுசமயம் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தரங்கம்பாடியில் தங்கிய சீகன்பால்க் அங்கு ஒரு அச்சகத்தை நிறுவி புத்தகங்களை அச்சடித்தார். அப்படித்தான் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த பைபிளின் புதிய ஏற்பாடு புத்தகத்தையும் 1715-ல் அச்சடித்தார்.

சீகன்பால்க்

தமிழில் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ‘புதிய ஏற்பாடு பைபிள்’ புத்தகமான அது அப்போது ஸ்வார்ட்ஸ் பாதிரியாரால் தஞ்சையை ஆண்ட துளசி ராஜா சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட இந்தப் புத்தகம் தமிழில் ஆரம்பகாலத்தில் அச்சான புத்தகங்களில் ஒன்றாக உள்ளது. எனவே, இது வரலாற்று ரீதியாக மிகுந்த சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த ஆவணமாகப் பார்க்கப்படுகிறது.

திருடப்பட்டது எப்படி?

மன்னர் சரபோஜியின் கலெக்‌ஷனில் இருந்த இப்புத்தகம் இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் சரஸ்வதி மகால் நூலகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2005- ம் ஆண்டு அக்டோபர் மாதத்து காலைப் பொழுதொன்றில் இந்த நூலகத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழு ஒன்று வந்து போனது. அதற்கு மறுநாள் பைபிள் புத்தகம் காணாமல் போயிருந்தது.

இந்த சம்பவம் நடந்தபோது சரஸ்வதி மகால் நூலக பணியாளராக இருந்த ஒருவர் அப்போது நடந்தவற்றை அப்படியே நம்மிடம் விவரித்தார்.

“அக்டோபர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை திடீரென பத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு டூரிஸ்ட்கள் இங்கு வந்திருந்தனர். கேமராவும் கையுமாக மியூசியத்தைச் சுற்றிவந்த அவர்கள், அனைத்தையும் படம் எடுத்தனர். அப்போது மியூசிய பொறுப்பாளராக இருந்த பெருமாளும் அங்கேயே இருந்ததால் அரசு அனுமதியுடன் தான் வந்திருப்பார்கள் என நாங்கள் நினைத்தோம். மாலை வரை அவர்கள் மியூசியத்தில் அனைத்தையும் படம் எடுத்துவிட்டுக் கிளம்பினர். அவர்கள் போன பிறகு வழக்கம்போல மியூசியத்தையும் நூலகத்தையும் பூட்டிவிட்டு நாங்களும் கிளம்பிவிட்டோம். அடுத்த 2 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் மியூசியத்தை திறக்கவில்லை.

சரஸ்வதி மகால் நூலகம்

திங்கள் கிழமை காலையில் எங்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காலையில் மியூசியத்தை திறந்த ஊழியர் ரவி பைபிள் புத்தகத்தை காணவில்லை என்று சொல்லவும் சரஸ்வதி மகாலே பரபரப்பாகிவிட்டது. காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீஸார் வருவதற்குள், உடைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட கண்ணாடி பேழையை அப்போது இரண்டாம் நிலை நூலகராக இருந்த சுதர்சனம் பூட்டிவிட்டார். பூட்டு உடைக்கப்பட்டதற்கான எந்தத் தடயமும் இல்லாததால் போலீஸார் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியாமல் முடித்துவிட்டனர்” என்று வருத்தத்துடன் சொன்னார் அந்த முன்னாள் பணியாளர்.

இந்த திருட்டு நடந்த சமயத்தில் சரஸ்வதி மகால் நூலகத்தின் இயக்குநராக (பொறுப்பு) தஞ்சை மாவட்ட ஆட்சியர் வீரசண்முகமணி இருந்தார். நிர்வாக அதிகாரியாக (பொறுப்பு) சுப்பிரமணியன் என்பவரும், காப்பாளராக குடவாயில் பாலசுப்ரமணியனும், முதல் நிலை நூலகராக ராமதிலகமும், இரண்டாம் நிலை நூலகராக சுதர்சனமும் இருந்தனர்.

இந்த திருட்டு குறித்து தெரியவந்ததும் தனது உயர் அதிகாரிகள் யாரிடமும் சொல்லாமல், பைபிள் வைத்திருந்த கண்ணாடி பேழையை பூட்டியதால் அப்போதே சதர்சனத்தின் மீது சிலர் சந்தேகம் கிளப்பினார்கள். வெளிநாட்டினரை எவ்வித அரசு அனுமதியும் இன்றி நூலகத்தினுள் படம் எடுக்க அனுமதித்த மியூசிய பொறுப்பாளர் பெருமாள், புத்தகம் காணாமல் போனதாக தெரியவந்த நாளில் விடுப்பில் இருந்தார். எனவே அவர் மீதும் சந்தேகம் வலுத்தது.

ஓலைச்சுவடிகள்

இந்த நிலையில், பைபிளை தொலைத்த குற்றத்துக்காக மியூசியத்தில் சாதாரண ஊழியராக இருந்த ரவி, திலகம் ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 6 மாதம் கழித்து நிர்வாக அதிகாரியாக சாமி.சிவஞானம் என்பவர் வந்த பிறகு சரஸ்வதி மகால் நூலகத்தின் பொருட்கள் குறித்து முழுமையான ஆய்வு நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை அடிப்படையில் ரவி, திலகம் ஆகியோரின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, பெருமாளுக்கும் சுதர்சனத் துக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு மட்டும் தடைசெய்யப்பட்டது. அத்தோடு இந்த வழக்கை அனைவரும் வசதியாக மறந்துவிட்டார்கள்.

விலைமதிப்பற்ற தமிழகத்தின் வரலாற்று ஆவணமான பைபிள் புத்தகம் திருடப்பட்டது தொடர்பாக 2017-ம் ஆண்டு வரை அரசு தரப்பில் எவ்வித அக்கறையும் காட்டப்படாதது இதுவரை விளங்காத மர்மம்.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

இந்த நிலையில், 2017-ல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் சிலை கடத்தல் வழக்குகள் வேகமெடுக்க ஆரம்பித்தன. அப்போது, சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து திருடப்பட்ட பைபிள் புத்தகம் குறித்தும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார், இதையடுத்து பைபிள் திருட்டு வழக்கையும் சீரியஸாக விசாரிக்கத் தொடங்கியது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ். தற்போது இந்த வழக்கை அந்தப் பிரிவின் டிஜிபி-யான ஜெயந்த் முரளி, ஐஜி-யான தினகரன், இன்ஸ்பெக்டர் இந்திரா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

பைபிள் பற்றிய விளம்பரம்

தஞ்சையில் திருடப்பட்ட பைபிள் பிரிட்டன் மியூசியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

காணாமல் போன பைபிள் தொடர்பாக யானை ராஜேந்திரன் தொடுத்த வழக்கில் 2017-லேயே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. அந்த நூலகத்தில் பணிபுரிந்த மற்றும் பணிபுரியும் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் 4 பேர் தற்போது பைபிள் எங்கு உள்ளது என்ற விவரத்தை குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பு ரகசிய வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

அவர்கள் சொன்னதை வைத்துப் பார்த்தபோது, சீகன்பால்க்-ஐ பின்பற்றும் சீடர்கள் தரங்கம்பாடி, சரஸ்வதி மகால் உள்ளிட்ட இடங்களுக்கு 2005-ல் வந்துபோனது தெரியவந்தது. டேனிஷ் மிஷனரியைச் சேர்ந்த சீகன்பால்குவின் பற்றாளர்கள் அவரின் 300 ஆண்டுகள் நினைவைப் போற்றும் வகையில் அவர் பயணித்த ஊர்களுக்கு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் சரஸ்வதி மகால் நூலகத்துக்கும் வந்துள்ளனர். அவர்கள் வந்தபோதுதான் இந்த பைபிள் புத்தகமும் காணாமல் போனது” என்று சொன்னார் அந்த அதிகாரி.

இந்த வழக்கின் விசாரணைக்காக சீகன்பால்குவின் வீடு மற்றும் மியூசியம் உள்ள தரங்கம்பாடிக்கும் விசாரணை அதிகாரிகள் சென்றனர். (தரங்கம்பாடி மியூசியத்தின் கண்ணாடி பேழைக்குள் காணாமல் போன பைபிளின் ஜெராக்ஸ் நகல் இப்போதும் உள்ளது) அப்போது, 2005-ல் தரங்கம்பாடிக்கு வருகை தந்த ஒருவரின் கையெழுத்தும் சரஸ்வதி மகால் வருகைப் பதிவேட்டில் பதிவாகி இருந்த ஒருவரது கையெழுத்தும் ஒத்துப் போனதால் அதையொட்டி விசாரணையை முடுக்கிய போலீஸார், அது டென்மார்க்கை சேர்ந்த ஒருவருடைய கையெழுத்து என கண்டுபிடித்தனர். இவர் மூலமாகவே பைபிள் புத்தகம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் ஊகித்தனர். இதையடுத்து, அந்த பைபிள் தற்போது எந்த நாட்டு மியூசியத்தில் இருக்கிறது என்பதை அறிய இணையத்தில் தேடினர். அப்போதுதான் பிரிட்டன் மியூசியம் ஒன்றின் இணைய பக்கத்தில் இந்த பைபிள் அகப்பட்டது.

தற்போது, யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி பைபிள் புத்தகத்தை இந்தியா மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வெளிநாட்டுக்கு இதைக் கடத்தியவர்கள் யார் என்பதை அறிய சென்னை எஃப்ஆர்ஆர்ஓ-வுக்கும் (Foreigners Regional Registration Officer) சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. பைபிள் கடத்தலில் சம்பந்தப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தின் ஊழியர்களையும் கிட்டத்தட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஃபிக்ஸ் செய்துவிட்டனர். பைபிள் புத்தகம் தமிழகம் வந்த பின்னர் அவர்கள் மீதான நடவடிக்கையும் சூடுபிடிக்கும் என்கிறார்கள்.

2005-ல், இந்த பைபிள் காணாமல் போன சமயத்தில் தஞ்சை சரபோஜி மன்னரின் ஓவியம் ஒன்றும் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல நூற்றுக்கணக்கான அரிய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், சிலைகள் உள்ளிட்ட பல வரலாற்று பொக்கிஷங்கள் சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. பைபிளைப் போலவே அவற்றையும் மீட்டு தமிழகம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

மீட்கிறார்களா என்று பார்க்கலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE