செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் செயல்படும் மீன் குஞ்சு வளர்ப்புப் பண்ணையில் பள்ளி மாணவர்களுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி அளித்திட ஆட்சியர் ச.அருண்ராஜ் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு யோசனை தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் பகுதியில் மீன்வளத் துறை சார்பில் மீன் குஞ்சு வளர்ப்புப் பண்ணை செயல்பட்டு வருகிறது. கட்லா, ஜிலேபி, ரோகு, சாதா கெண்டை, தேங்காய் பாறை ஆகிய மீன் குஞ்சுகள் 12.5 ஏக்கர் பரப்பளவில் இங்கு வளர்க்கப்படுகின்றன. மீன் குஞ்சுகள் தேவைப்படும் நபர்களுக்கு விற்கப்படுகிறது. மேலும், மீன் விவசாயிகளுக்கு 1000 எண்ணிக்கையிலான மீன் குஞ்சுகள் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.
செங்கல்பட்டு ஏரிகளில் மீன் வளர்த்திட மீன் விவசாயிகள் இங்கிருந்து மீன் குஞ்சுகளை வாங்கி செல்கின்றனர். கடந்த நிதி ஆண்டில் இங்கு 20 லட்சம் மீன் குஞ்சுகள் விற்பனையாகியுள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரைக்கும் 4.5 லட்சம் மீன் குஞ்சுகள் விற்பனை ஆகி உள்ளது. இந்த ஆண்டு 33 லட்சம் மீன் குஞ்சுகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» சைபர் க்ரைம் பிரிவில் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதா? - தென் மண்டல ஐஜி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
» கோயில் விழாக்களில் ஆபாச நடனத்தை தடை செய்க: கோவை ஆட்சியரிடம் மேடை நடன கலைஞர்கள் மனு
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் இன்று காலை மின் குஞ்சு வளர்ப்புப் பண்ணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மீன் குஞ்சுகளை நிலைப்படுத்தும் தொட்டி, மீன் தீவன அறை, மீன் வளர்ப்புக் குளங்கள் ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மீன் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக மீன் பண்ணைக்கு அழைத்து வந்து விரிவாக எடுத்துரைத்து, அவர்களுக்கு மீன் வளர்ப்பு குறுத்து பயிற்சி வழங்கிடவும் அது குறித்து அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் அறிவுறுத்தினார்.
மீன் பண்ணையை சுத்தமாக பராமரித்திடவும், காலியாக உள்ள தொட்டிகளில் அதிக எண்ணிக்கையில் மீன்களை வளர்த்து விற்பனையை அதிகரிக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், வட்டார அளவில் உள்ள ஏரி, குளங்களில் மீன் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது, மீன்வள உதவி இயக்குநர் ஜனார்த்தனன், செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி, மீன்வள மேற்பார்வையாளர் கீதா, மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.