1 முதல் 12 வரை இனி முழுப்பாடம் நடத்தப்படும்... செல்போன் கொண்டு வந்தால் கிடைக்காது: மாணவர்களுக்கு எச்சரிக்கை

By காமதேனு

கரோனா காரணமாகக் கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகள் முழுமையாகச் செயல்படவில்லை. இதனால், 10-ம் வகுப்புக்கு 29 சதவீதமும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும், 1-9ம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும் பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தன. பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், 1 முதல் 10-ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 12 வகுப்பு வரும் 20-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு 27-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த வருடம் பள்ளிகள் சரியான நேரத்தில் திறக்கப்பட்டதால் முழு பாடத்தையும் ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த கல்வியாண்டு வழக்கமான கல்வி ஆண்டாக இருக்கும் என்பதால், இந்த கல்வி ஆண்டில் 230 நாள்களிலும் பள்ளிகள் இயங்கும். பள்ளி நடைபெறும் நாட்கள் குறைக்கப்படாததாலும், அனைத்துப் பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதாலும் பள்ளிக் கல்வித் துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ், “கடந்த இரண்டு வருடங்களாகவே கரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் மன இறுக்கத்தில் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளியிடும் வீடியோக்கள் சர்ச்சைக்குள்ளாகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்போன்களை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறையில் பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் மாணவர்களிடம் திருப்பித் தரப்பட மாட்டாது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE