காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிக்கடி மாற்றப்படும் ஆங்கில வழிப் பாடங்கள்!

By KU BUREAU

திருச்சி: தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் மிகுந்த வரவேற்பு உள்ள ஆங்கிலவழி பாடப் பிரிவுகளை அடிக்கடி மாற்றுவது பெற்றோர் மற்றும் மாணவிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுமார் 800 மாணவிகள் படித்து வருகின்றனர். 22 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்பட்ட பிறகு மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இப்பள்ளியில் பிளஸ் 1வகுப்பில் மைக்ரோ பயாலஜி, எக்னாமிக்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் ஆகியபிரிவுகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு எக்னாமிக்ஸ் பாடப் பிரிவுமூடப்பட்டது.

தொடர்ந்து, நிகழாண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பாடப் பிரிவு மூடப்பட்டுள்ளது. இதனால், இப்பாடப் பிரிவுகளில் மாணவிகளை சேர்க்க எண்ணியிருந்த பெற்றோர் மற்றும் மாணவிகள் கவலையும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் எஸ்.எஸ்.ரகமதுல்லா, ‘இந்துதமிழ்’ நாளிதழிடம் கூறியது: மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், வேலைவாய்ப்பு அதிகம் உள்ள பாடத் திட்டங்களை ஆங்கிலவழியில் படிப்பதற்காக இப்பள்ளியில் சேர்கின்றனர்.

ஆனால், கல்வித் துறையோ அடிக்கடி பாடப் பிரிவுகளை மாற்றி மாணவிகளையும், பெற்றோரையும் அலைக்கழிக்கிறது. 2022-ம் ஆண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பாடப் பிரிவை மூடுவதாக அறிவித்தனர். பெரும் போராட்டம் நடத்தி அந்த பாடப் பிரிவை மீண்டும் தொடர ஏற்பாடு செய்தோம். இந்நிலையில், நிகழாண்டு மீண்டும் அந்த பாடப் பிரிவை மூடிவிட்டனர்.

நிகழாண்டு பிளஸ் 1 வகுப்பில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் மாணவிகளை சேர்த்துவருகின்றனர். போதிய எண்ணிக்கையில் மாணவிகள் சேர்ந்தால் மட்டுமே இந்த வகுப்பு தொடங்கும் என்ற நிபந்தனையுடனேயே சேர்த்துள்ளனர். இதனால், இந்த பாடப் பிரிவில் சேர்ந்துள்ள மாணவிகள் மிகுந்த மனஉளைச்சல் அடைந்துள்ளனர்.

மேலும், இப்பள்ளியில் 2022, நவ.28-ம் தேதி நடைபெற்ற வானவில் மன்ற தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றபோது, பாதுகாப்புகாரணங்களுக்காக 8 வகுப்பறைகள் கொண்ட பழைய கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்றுவரை அந்த வகுப்பறைகளை மீண்டும் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ஆட்சியர் ஆகியோரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், கட்டிடங்களுக்கு வெளியே நிழலில், வராண்டாவில் உட்கார்த்து மாணவிகள் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இதனால் மாணவிகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது என்றார்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் தேன்மொழி கூறியது: பள்ளிக்கு 10 வகுப்பறைகள் கொண்டகூடுதல் கட்டிடம் கட்டித் தருமாறு கேட்டிருக்கிறோம். தாட்கோமூலம் ரூ.2 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட திட்ட அறிக்கை தயாரித்துஅனுப்பப்பட்டுள்ளது. நிகழ் கல்வி ஆண்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும்.

கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பாடப் பிரிவுக்கு காமர்ஸ் ஆசிரியர் தேவை. கடந்த ஆண்டு காமர்ஸ் ஆசிரியர் இல்லாமல் அந்த பாடப் பிரிவை தொடர பெரும்பாடு பட்டோம். எனவே, நிகழாண்டு கணிணி அறிவியல் பாடப் பிரிவு தொடங்க முடிவு செய்தோம்.

இந்நிலையில், பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பாடப்பிரிவையே தொடர முடிவு செய்திருக்கிறோம். இதற்காக ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநரிடம் பேசி, காமர்ஸ் பாடத்துக்கு ஆசிரியரை நியமிக்கக் கோரியுள்ளோம். அவரும், அதற்கான ஆசிரியரை நியமிப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE