‘எல்லா குழந்தைகளும் பள்ளிக்குத் திரும்பும்வரை எங்கள் பணி தொடரும்!’

By மு.அஹமது அலி

திண்டுக்கல்லைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர், கரோனா காலத்தில் இடைநின்று பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர உதவி புரிந்து வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் லாவண்யா. இவர் கரோனா காலத்தில் பொருளாதாரச் சிக்கல் காரணமாக இடைநின்று பள்ளிக்குச் செல்ல முடியாத சூழலில் உள்ள மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர உதவி புரிந்து வருகிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய லாவண்யா, "மாணவர்களுக்குக் கல்வியே நிரந்தர சொத்து என்பதால், குற்றங்கள், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் போன்றவற்றில் சிக்கிக்கொள்ளாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். காவல் துறையின் சார்பாக மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வின்போது, கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகளில், ​​பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைக் கண்டறிந்தோம். மேலும், இது தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 'நண்பர்' என்ற எங்கள் மகளிர் உதவி மையம் அந்த மாணவர்களின் குடும்பங்களை நேரில் அணுகி மீண்டும் பள்ளிப் படிப்பைத் தொடர்வது குறித்த ஆலோசனைகளை வழங்கியது" என்றார்.

காவல் துறை அதிகாரி லாவண்யா

இச்செயல்முறையை ஒரு வெற்றிகரமான நடவடிக்கை என்று கூறும் லாவண்யா, "இந்த நடவடிக்கை இதோடு நின்றுவிடாது. மாறாக, மகளிர் உதவி மையத்தினர் இதை முழுமையாகச் செயல்படுத்த முயற்சி எடுத்துக்கொண்டே இருப்பார்கள்” என்றார்.

மேலும், "பள்ளிகளுக்கு வந்து சிறிது காலம் கழித்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதை நிறுத்தினால், நாங்கள் மீண்டும் அவர்களது குடும்பங்களுக்குச் சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம். தற்போது வரை, சுமார் 200 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பியுள்ளோம். மேலும், பள்ளிகளில் இடைநிறுத்தப்பட்ட ஒவ்வொருவரும் மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்தி வருகிறோம். எல்லா குழந்தைகளும் பள்ளிக்குத் திரும்பும்வரை எங்கள் பணி தொடரும். கல்வித் துறையும் மாவட்ட நிர்வாகமும் இந்தத் திட்டத்தில் எங்களுக்கு முழுமையாக உதவுகின்றன" என்றார் லாவண்யா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE