அண்ணா பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மைதன்மை சரிபார்ப்பிற்கான கட்டணம், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிக, நிரந்தர பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கட்டணங்கள் மீதும், தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டணங்களின் மீதும், விடைத்தாளின் நகலினை பெறுவதற்கான கட்டணத்தின் மீதும் 18 சதவீதம் பொருள்கள் மற்றும் சேவை வரியை அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது.
இது அண்ணா பல்கலைக்கழக மாணவர்களையும், அதன் இணைப்புக்கல்லூரி மாணவர்களையும் வெகுவாகப் பாதிக்கும். இதன்படி மதிப்பெண் நகல் சான்றுக்கான கட்டணம் பத்து மடங்கு, அதாவது 300 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பட்டப்படிப்பு நகல் சான்றுக்கான கட்டணம் 3000 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டாவது முறை நகல் சான்று பெறுவதற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு 18 சதவீதம் பொருள்கள் மற்றும் சேவைவரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எளிய பின்னணியில் இருந்து, கல்விக்கடன் எடுத்து பொறியியல் படிக்கும் மாணவர்களை இந்த கட்டண உயர்வு மிகக்கடுமையாகப் பாதிக்கும். தமிழக முதல்வர் இந்தக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ”என அவர் வலியுறுத்தியுள்ளார்.