திருச்சி: இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியறுத்தி இத்திட்டத்தில் பணியாற்றிய தன்னார்வலர்கள் திருச்சி ஆட்சியரிடம் மனு அளிக்க குவிந்தனர்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு கரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்ததால் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என இல்லம் தேடி கல்வி என்கிற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது. கரோனா பெருந்தொற்று காலம் முடிந்த பின்பும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அந்த திட்டம் தொடர்ந்து செயல்படும் என அரசு அறிவித்தது. 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்படுவதாகவும், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இனி மையங்கள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த திட்டத் தன்னார்வலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.
மனுவில், "இல்லம் தேடி கல்வி திட்டத்தை நிறுத்தக் கூடாது. மேலும் திட்டத்தின் பெயரை மாற்றி மையங்களை குறைக்க கூடாது. அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு வெளியில் சென்று தனி பயிற்சி (டியூசன்) வகுப்புகள் செல்வது கடினம். அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் மூலமாக கல்வி கற்றுத் தந்தால் அவர்களுக்கும் வசதியாக இருக்கும்." என மனுவில் கூறப்பட்டுள்ளது.
» மதுரை: ஆணவப் படுகொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி தமிழ்ப் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
» கன்னியாகுமரி: குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து நாற்று நட்டு விவசாயிகள் போராட்டம்