நாளை பிளஸ்2 பொதுத் தேர்வு தொடக்கம்: இதுவரை இல்லாத கட்டுப்பாடுகள் அறிவிப்பு

By காமதேனு

தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதித்துள்ள அரசு தேர்வுகள் துறை, இதை மீறும் தேர்வர்கள், ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நாளை பிளஸ் 12 பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வர்கள், ஆசிரியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அரசு தேர்வுகள் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஒழுங்கீனச் செயல்பாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையோ, பகுதி விடைகளையோ தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். இக்குற்றங்களுக்கு இத்துடன் இணைத்து அனுப்பப்படும் தண்டனைகள் குறித்த பட்டியலில் உள்ளவாறு தண்டனைகள் வழங்கப்படும்.

மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்திட பள்ளிக் கல்வி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE