`கல்வி அமைச்சர் சொன்னார், இன்னும் நிறைவேற்றவில்லை'- குமுறும் பகுதிநேர ஆசிரியர்கள்

By காமதேனு

``மே மாதத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும், தங்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மறுக்கப்படும் மே மாதம் சம்பளத்தை வழங்க வேண்டும்'' என்று கேட்டு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நம்மிடம் கூறுகையில். ``கடந்த அதிமுக ஆட்சியில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை மாதம் ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்க ஆண்டுக்கு ரூ.99 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 26-8-2011 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இது ஒரு ஆண்டுக்கான 12 மாதங்களுக்கான சம்பள கூட்டுத் தொகையாகும். பின்னர் அரசாணை வெளியிடப்பட்டு, 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் பணி அமர்த்தியது. மார்ச், ஏப்ரல் மாதம் முடிந்த உடனே, அம்மாதத்திற்கான சம்பளம் தமிழகம் முழுவதும் பட்டுவாடா செய்யவில்லை. இதனை அடுத்து வந்த மே மாதம் பள்ளிகள் விடுமுறை என்பதால் சம்பளம் சேர்த்து கொடுக்கப்படும் என்று தகவல் வெளியானது.

ஆனால் மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதத்திற்கு மட்டுமே பின்னர் ஜூன், ஜூலையில் பட்டுவாடா செய்யப்பட்டது. இதுபோல மே மாதம் சம்பளம் தாமதமாகும் என்று நம்பினார்கள். ஆனால் கொடுக்காமல் விடுபட்டுபோனது. நாளடைவில் மே மாத சம்பளம் தர இயலாது என்றாகிவிட்டது.

செந்தில்குமார்

இப்படியாக, 2012-ம் ஆண்டு முதல் கடைசியாக 2020 வரை 9 வருடமாக மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. மே மாதம் சம்பளம் கிடையாது என்றோ, 11 மாதங்களுக்கு மட்டும்தான் சம்பளம் உண்டு என்றோ இதற்கு முன்பு எந்த உத்தரவும் கிடையாது. இந்த நிலையில், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அன்று ரூபாய் 10 ஆயிரம் சம்பளம் உயர்த்தியபோது, அதற்கான ஆணை 15-ல் மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மட்டுமே என நிபந்தனை சேர்க்கப்பட்டு இருந்தது. சிலர் மே மாதம் சம்பளம் கேட்டு வழக்கு தொடர்ந்ததால், இனிவரும் காலங்களில் மே மாதம் சம்பளம் கிடையாது என்பதற்காக அப்போதைய அதிமுக அரசு இப்படி செய்துவிட்டது.

இந்த நிலையில் திமுக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக சேர்த்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மே 7 அன்று ஆட்சி அமைத்தது. மிக குறுகிய நாட்களில் திமுக அரசிடம் மே மாதம் சம்பளம் கேட்டு கோரிக்கை வைத்தோம். அப்போது கரோனா காரணமாக பள்ளிகள் நடைபெறாமல் இருந்தது. அதனால் வீட்டில் முடங்கி இருந்தோம். இதனை பரிசீலிப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் சொன்னார். ஆனால் திமுக ஆட்சியிலும் வழங்கவில்லை.

இப்படி 10 ஆண்டு மே மாதம் சம்பளம் ஒவ்வொருவரும் ரூபாய் 71 ஆயிரம் இழந்துள்ளோம். பொதுவாக மே மாதம் என்றாலே பள்ளிகள் விடுமுறையில் இருக்கும். ஆனால் இம்முறை 2022-ம் ஆண்டு மே மாதம் பள்ளிகள் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும். அதற்குரிய சம்பளம் வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள நடைமுறையில் உள்ளதை மாற்றி தமிழக அரசு இதற்காக புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

2022-ம் ஆண்டு ஜனவரி 6 அன்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர், திமுக தேர்தல் அறிக்கைபடி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என அதிமுக உறுப்பினருக்கு பதில் தெரிவித்துள்ளார். எனவே, அதற்கு முன்னோட்டமாக மே மாதம் வேலையோடு, சம்பளம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். முந்தைய அரசு போட்ட உத்தரவை கைவிட்டு, 12 ஆயிரம் குடும்பங்கள் நலன் கருதி மனிதாபிமானத்துடன் இதை செய்ய வேண்டுகிறோம்.

பள்ளிகள் நடக்கும்போது எங்களை வரவேண்டாம் என்றால் அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், மற்ற பணியாளர்கள் எப்படி மதிப்பார்கள் என்ற மனகுமுறல் ஏற்படுகிறது. எனவே பள்ளிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வரவேண்டாம் என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறோம். எங்கள் வேண்டுகோளை அவசர அவசரம் கருதி உடனடியாக பரிசீலித்து, இந்த மே மாதம் வேலையுடன் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்க உதவுமாறு வேண்டுகிறோம்" என்று கேட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE