ஆளுநரிடமிருந்து வேந்தர் பதவியை பறிக்க வேண்டும்!

By ம.சுசித்ரா

மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநருக்கு, துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையில் மசோதா விவகாரங்களில் மோதல் வலுத்துள்ள நிலையில், துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் சட்ட மசோதா அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 13 அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநரின் அதிகாரம் இன்றி மாநில அரசே நியமிக்க வகை செய்யும் இந்த மசோதா சரியானது தானா? கல்வியாளர்கள் சிலரிடம் பேசினோம்.

ஜவஹர் நேசன்

தேசியக் கல்விக் கொள்கையை குறுக்கு விசாரணை செய்த ’கல்வியைத் தேடி’ உள்ளிட்ட புத்தங்களின் ஆசிரியர், மைசூர் ஜேஎஸ்எஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர கல்விச் செயற்பாட்டாளராக உருவெடுத்தவர், தற்போது தமிழக மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கும் குழு உறுப்பினராக இருக்கும் பேராசிரியர் ஜவஹர் நேசனிடம் கேட்டபோது,

”எந்த மசோதாவாக இருந்தாலும் ஆளுநர் மூலமாக அது குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படும். அந்த வகையில் குஜராத், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கோரப்பட்டபோது அவற்றுக்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார். காரணம், அதில் இரண்டு மாநிலங்களில் ஆளும் அரசும், மத்திய அரசும் ஒரே கட்சி. அதனால் பிரச்சினை வராது என்ற எண்ணத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தமிழகத்துக்கும் ஒப்புதல் அளித்தாக வேண்டும். ஒருவேளை, இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தால் தமிழக அரசு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும்” என்றார்.

மாநிலப் பல்கலைக்கழகங்களை உருவாக்கியது மாநில அரசுதான். மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் முதல்வர். அதுமட்டுமின்றி மாநிலத்துக்கு மாநிலம் அதன் கொள்கையும், சித்தாந்தமும் சமூகச்சூழலும் வேறுபடுகிறது. அந்தந்த மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ற உயர்கல்வியை வடிவமைப்பதும் அதற்கான உரிய துணைவேந்தரை தேர்வு செய்து நியமிக்கும் முழு அதிகாரமும் மாநில அரசிடம் இருப்பதே நியாயம். அப்படி இல்லாமல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதியாக இருந்துகொண்டு துணைவேந்தர்களை நியமிக்கும்போது அங்குக் கருத்து வேற்றுமை வந்துவிடுகிறது.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி பேசிய ஜவஹர் நேசன், “இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி மாநிலப் பட்டியலின் (பட்டியல்2) 32-வது இடுகைக்குக் கீழ்தான் பல்கலைக்கழகங்களை நிறுவுதல், ஒழுங்குமுறைபடுத்துதல், இணைத்தல் ஆகியவை உள்ளன. அப்படியானால் ஏற்கெனவே மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் பல்கலைக்கழகம் உள்ளது. இவ்வளவு அதிகாரம் மாநில அரசின் வசம் இருக்கும்போது துணைவேந்தரை மட்டும் யாரோ ஒருவர் வந்து நியமிப்பார் என்கிற நிலை நீடிக்கக்கூடாது.

அரசுக்கு என்னுடைய ஆலோசனை யாதெனில் வேந்தர் பொறுப்பில் ஆளுநர் இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான். வெறும் துணைவேந்தரை நியமிக்கும் பொறுப்பிலிருந்து மட்டும் ஆளுநரை நீக்கினால் போதாது. ஆளுநரிடமிருந்து வேந்தர் பதவியை பறித்துவிடுவதே தீர்வு. ஏனென்றால், சிறந்த கல்வியாளர், கல்விப்புலத்தின் நிர்வாகத்தில் தலைமைப்பண்பு கொண்டவராக விளங்கக்கூடியவர் மட்டுமே வேந்தர் பதவிக்குப் பொருத்தமானவர். ஆளுநருக்கும் கல்விப்புலத்துக்கும் என்ன தொடர்பு சொல்லுங்கள்? அவரால் கல்விப்புலத்துக்கு எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் ஒரு வேந்தரை நியமிக்கலாம்” என்றார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல்கலைக்கழகம் தோறும் ஒரு வேந்தர் வழிநடத்துவது நடைமுறையில் உள்ளது. அவ்வளவு ஏன், இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் திறமை வாய்ந்த கல்வியாளர்கள் தான் வேந்தர்களாக உள்ளார்கள். மத்திய பல்கலைக்கழகங்களுக்குக் குடியரசுத்தலைவர் விஜயம் செய்பவராக மட்டுமே இருக்கிறார். அங்கு வேந்தர் பதவியில் ஆளுநரோ அல்லது குடியரசுத்தலைவரோ செயல்படுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனிவாசன்

துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு கைப்பற்றிவிட்டால் மட்டும் தமிழக உயர்கல்வியில் ஏற்றம் கண்டுவிட முடியாது. அதை தாண்டி பல்வேறு சிக்கல்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் (Save MKU) தலைவரும், அங்கே மும்முறை ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தவருமான ஓய்வுபெற்ற பேராசிரியர் சீனிவாசன்.

“பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டம், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அத்தனையையும் தீர்மானிக்கும் சக்தி உண்மையில் துணை வேந்தர் அல்ல. பாடத்திட்டக் குழுமம், நிலைக்குழு, அகடமிக் கவுன்சில், செனட் எல்லாவற்றையும் தாண்டி ஆட்சிக்குழுவுக்குத் தீர்மானங்கள் வரும். ஆட்சிக்குழுவின் 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களால் ஜனநாயக முறைப்படி விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும். அத்தகைய ஆட்சிக்குழுவுக்குத் தலைவர் என்ற அதிகாரத்தில் அல்ல பொறுப்பில் வீற்றிருப்பவர்தான் துணை வேந்தர். செனட் ஏற்றுக்கொள்ளாத எதையும் ஆட்சிக்குழுவால் நடைமுறைப்படுத்த முடியாது. இவர்களை மீறி துணை வேந்தர் தாந்தோன்றித்தனமாக முடிவெடுத்தால் அதை ஏற்க மறுக்கும் அதிகாரம் ஆட்சிக்குழுவுக்கு உண்டு” என்றார் சீனிவாசன்.

இவ்வளவு அதிகார பரவல் இருக்கக்கூடிய பல்கலைக்கழக அமைப்பை கடந்த 20 ஆண்டுகளாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை செய்தது தமிழக ஆளுநர்களாக இருந்த பன்வாரிலால் புரோகித், ஆர்.என்.ரவி ஆகியோர் மட்டுமல்ல. தமிழகத்தை ஆளும் திமுக, ஆண்ட அதிமுக என இரு பெரும் கட்சிகளுமே மாறி மாறி இதைச் செய்திருக்கின்றன. செனட், ஆட்சிக்குழுவுக்குத் தேர்தல் நடைபெறவிடாமல் செய்து செயலிழக்கச் செய்ததன் விளைவுதான் துணைவேந்தரிடம் அதிகார குவியல் ஏற்பட்டது என்பதையும் அழுத்தமாகச் சொன்னார் சீனிவாசன்.

இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், ”திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மருமகன் கற்பக குமாரவேல், நெடுஞ்செழியன் மருமகள் கல்யாணி மதிவாணன் போன்றோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குத் துணை வேந்தராக நியமிக்கப்பட்டதே மாநில அரசு செய்த அதிகார துஷ்பிரயோகம்தான். இப்படி கட்சி, சாதி, மதம், பணம் ஆகிவற்றின் அடிப்படையில் துணை வேந்தராகப் பதவி வகித்தவர்கள் செய்த முறைகேடுகளைத் தமிழகம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறது. சாதி, மதம், அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் துணை வேந்தர் நியமனம் திமுக ஆட்சியில் நடைபெற்றதென்றால் அதிமுக ஆட்சியின்போது அது முழு முழுக்க பணப்பட்டுவாடா அடிப்படையாக மாறிப்போனது. பாஜக எனும்போது தங்களது கட்சிக்காரர்களாக இருப்பதைச் சுருக்க முயல்கின்றனர்” என்றார்.

சட்டப் பேரவையில் பல்கலைக்கழக திருத்தச் சட்ட முன்வடிவினை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தபோது அதன் மீது கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “கொள்கை முடிவு எடுக்கும் அரசுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாதது மக்களாட்சித் தத்துவத்துக்கே எதிரானது” என்றார்.

துணைவேந்தர்கள் மட்டுமல்லாது பல்கலைக்கழகத்தின் அத்தனை அங்கத்தினரை நியமிப்பதிலும் பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டிலும் இனியேனும் அந்த மக்களாட்சி தத்துவமானது நேர்மையோடு நடைமுறைப்படுத்தப்படுவதை முதல்வர் ஸ்டாலின் உறுதிசெய்ய வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE