மாநில கல்விக் குழு நீட் தேர்வால் மடிந்த கண்மணிகளையும் மறக்காது!

By ம.சுசித்ரா

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு வெளிவந்ததும் அதன் மீது அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது அதை தயாரித்த குழுவில் காலங்காலமாகக் கல்வி உரிமைக்காகப் போராடியவர்கள், இயக்கத்தினர், சிறந்த கல்வியாளர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது. அத்தகைய குற்றச்சாட்டு எழாதபடி தமிழகத்துக்கான கல்விக் கொள்கையை வகுக்கும் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

இக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களில் ஒருவர் கல்விப் புலத்திலும், களத்திலும் நீண்ட நெடிய பயணத்துக்குச் சொந்தக்காரரும், ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியருமான ச.மாடசாமி. இவர் வகுப்பறை, தொழிற்சங்கம், அறிவொளி இயக்கம், மனித உரிமைக் கல்வி என பல தளங்களில் அர்பணிப்புடன் பங்காற்றியவர். இவரது, ‘எனக்குரிய இடம் எங்கே?’, ‘என் சிவப்புப் பால் பாயின்ட் பேனா’, ’குழந்தைகளின் நூறு மொழிகள்’, ‘போயிட்டு வாங்க சார்’ உள்ளிட்ட நூல்கள் எண்ணிலடங்கா ஆசிரியர்களை மேன்மக்களாகப் புடம்போட்டவை. இந்நிலையில், அமையவிருக்கும் மாநில கல்விக் கொள்கை எப்படி இருக்கும் என மாடசாமியிடம் கலந்துரையாடினோம்.

தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்துவிட்டு தமிழகத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கையை வகுக்க முதன்மை காரணம் என்ன?

கோத்தாரி கல்வி அறிக்கை (1964) தொடங்கி இன்றுவரை கல்விக் கொள்கைகளைக் கவனித்து வருகிறோம். எளிய மக்களின் கனவுகளைக் கல்விக் கொள்கைகள் பேசுவதும் பின்னர் கைவிடுவதும் உண்டு. ஆளும் ஒன்றிய அரசு வெளியிட்ட கல்விக் கொள்கை எளிய மக்களைப் பொருட்படுத்தவும் இல்லை, அவர்களின் கனவுகள் சிதைந்து நொறுங்குவது குறித்துக் கவலை கொள்ளவும் இல்லை.

தேர்வு, நுழைவுத் தேர்வுகள் மூலம் எளியோர் வீட்டுப் பிள்ளைகளை வகுப்பறையிலிருந்து துரத்துவதே ஒன்றிய அரசின் ‘புதிய கல்விக் கொள்கை’யின் பிரதான நோக்கம். வடிகட்டுவதற்கு ஒரு வார்த்தை இருக்கிறது. அதன் பெயர் ‘தரம்’. தரம் என்பது ஒரு முகமூடி- குறிப்பாக, மத்திய, உயர் மத்திய வர்க்கப் பார்வை உடையோர்க்கு. தரம் என்பது ஒரு வன்முறையும் கூட- ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறை. கல்வியில் ஒற்றை அதிகாரத்தை உருவாக்குவது, சிறு சிறு வாசல்களை அடைத்து விடுவது ( உதாரணம் - எம்.ஃபில் நீக்கம்) வர்த்தகத்துக்கான வாசல்களை அகலத் திறந்து விடுவது ( உதாரணம்- கோச்சிங் சென்டர் வியாபாரம்), சமஸ்கிருதத்தை இந்திய வகுப்பறைகள் முழுக்க திணிப்பது போன்ற அநீதிகள் தேசிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கின்றன.

'படிப்பாளி வச்சிருந்த காகிதம் எல்லாம் உழைப்பாளி தொட்ட பின்னே ஆயுதமாச்சு’ என்று பாடி சாதாரணர்களை அதிகாரப்படுத்தும் ஆற்றல் மிகுந்த கருவி கல்வி என்பதை சொன்ன அறிவொளி இயக்கத்தின் முதன்மையான உந்துசக்தியாக விளங்கியவர் தாங்கள். அந்த அனுபவத்திலிருந்து மாநில கல்விக் கொள்கை உருவாக்கத்தில் எதையெல்லாம் சேர்க்கலாம் என நினைக்கிறீர்கள்?

எளிய மக்களின் கல்வித் தாகத்தை அறிவொளியில் கண்டோம்.

பத்து ரூபா பத்தரைக்கா

பக்கத்துல ஒரு பள்ளிக் கூடம்

படிக்க ஒரு புள்ள இருந்தா

பங்காளிய தேடுவனா? - என்று தவிக்கும் குரலை அறிவொளியில் கேட்டோம்.

பட்டா, படி எழுதி மலர்ந்த முகங்களை அறிவொளியில் பார்த்தோம்.

எளிய- கிராமத்து மக்களின் கனவுகளை மதிக்கக்கூடிய ஒரு கல்விக் கொள்கைக்காக நாங்கள் ஏக்கத்துடன் காத்திருந்தது உண்மை. இன்று தமிழக அரசு மாநிலத்துக்கென கல்விக் கொள்கையை உருவாக்குகிறது. கல்வியில் ஒரு ஜனநாயகம் உருவாகும் என்பது எங்கள் முதல் நம்பிக்கை.

பாடத்திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் வகுப்பதே கல்விக்கொள்கை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, ஒட்டுமொத்த தேசத்தின் போக்கைக் கோடிட்டுக் காட்டும் திட்டம் கல்விக் கொள்கை என்பதை உணர்த்தும் விதமாக மாநில கல்விக் கொள்கையில் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படும்?

கல்விக் குழு கூட வேண்டும். மாநிலம் முழுவதும் கல்விக்காகப் பாடுபடும் சிறு சிறு குழுக்களை இக்கல்விக் குழு சந்திக்க வேண்டும். பெற்றோர், மாணவர், ஆசிரியர்களோடு தொடர் உரையாடல் நடத்தவேண்டும். பல தரப்பினரின் பங்கேற்போடு ஒரு கல்விக் கொள்கை உருவாக வேண்டும்; உருவாகும். மத்திய, உயர் மத்திய வர்க்கக் குடும்பங்களின் தேவைகளையும் விருப்பங்களையும் மட்டுமே நிறைவேற்றும் பிற்போக்குக் கல்விக் கொள்கைகளுக்கு மாற்றாகவும், சவாலாகவும் தமிழகத்தின் கல்விக் கொள்கை இருக்கும் என்பதை மட்டும் இப்போது உறுதியாகக் கூறமுடியும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

அது ஒரு போராட்டம். மாநிலங்கள் பல ஒன்றுகூடி எடுக்க வேண்டிய போராட்டம். இந்தப் போராட்டத்தின் முன்வரிசையில் நிச்சயம் தமிழகம் நிற்கும். அதிகாரத்தை மையப்படுத்தும் போக்கு ஒன்றிய அரசிடம் அதிகரித்து வருவது கண்கூடு. அதிகாரத்தை மையப்படுத்தும் போது எதிர்வினைகள் இருக்காது என எண்ணுவது ஒரு மூட நம்பிக்கை; அது வரலாறு தெரியாத பார்வை.

கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் மாணவர்களின் கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது என்பதை ஏசர் (ASER), நாஸ் (NAS) உள்ளிட்ட பள்ளிக் கல்வி குறித்த ஆய்வறிக்கைகள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சுட்டிக்காட்டி வருகின்றன. இதற்கு என்ன தீர்வு?

முன்னேற்றம், தடுமாற்றம் இரண்டும் சேர்ந்துதான் இருக்கிறது நம் கல்விப் பயணத்தில். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் போதாமை, அடிப்படை வசதிகளின்மை -இவ்விரு பிரச்சினைகளிலும் கல்விக் குழு தலையிட்டுத் தீர்வு காணவேண்டும். அரசுப் பள்ளிகளின் சக்தி கூடும் போது கல்விப் பயணத்தில் தடுமாற்றம் குறையும்.

நெடுங்காலமாகக் கல்வியில் தலைசிறந்த நாடு என்றதும் பின்லாந்து என்றே சொல்லப்படுகிறது. எதனால்? அவர்களிடமிருந்து நாம் எடுத்துக்கொள்ள ஏதேனும் உண்டா?

வகுப்பறையில் மாணவர்க்கான சுதந்திரம், ஆசிரியர் மாணவர் நெருக்கம், மாணவர் மைய பாடத்திட்டம் போன்றவை பின்லாந்தை முதலிடத்தில் நிறுத்தியிருக்கின்றன. திணிப்பதுதான் கல்வி என்ற போக்கும், ஆசிரியப் பணி அறப்பணி என்ற பிரமைகளும் தகர்ந்தால் இங்கும் வகுப்பறையில் பின்லாந்து உருவாகும்.

எழுத்துத் தேர்வு என்கிற ஒற்றை அளவுகோல் மூலம் எல்லா மாணவர்களின் திறனை நிர்ணயிப்பதற்குப் பதிலாக மாற்று வழிகள் கண்டறியப்பட வேண்டாமா?

நல்ல கேள்வி. தேர்வின் அழுத்தம் மேற்கு நாடுகளில் வெகுவாகக் குறைந்துவிட்டது. தேர்வு முடிவுகள் பிள்ளைகளை மரணத்துக்குத் தள்ளுவதில்லை. பிள்ளைகள் குறித்த மதிப்பீடுகள் புத்தகத்துக்குள் மட்டும் கட்டுப்பட்டுக் கிடக்கவுமில்லை. ‘பொது சேவை’ யில் ஈடுபடும் மாணவர்கள் அங்கு வெகு சுலபமாகக் கல்லூரி மேற்படிப்புக்குச் செல்வதையும் பார்த்திருக்கிறேன். விதிகளும் அங்கு இளகிவிட்டன. சமூகவியல் படித்த மாணவர் இஞ்ஜினியர் ஆக நினைத்தால் வழியுண்டு. விதிகளை இறுக்குவதும் வழிகளை அடைப்பதும்தான் இங்கு கல்வியின் தரம். வழிகளையும் வாசல்களையும் திறப்பது நிச்சயம் இக்கல்விக் குழுவின் நோக்கமாக இருக்கும்.

நீட் தேர்வு போலவே அனைத்து பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்கிறது தேசிய கல்விக் கொள்கை. சில தினங்களுக்கு முன்புகூட, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மாநிலக் கல்விக் கொள்கையின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

வடிகட்டித் துரத்துவதும், கோச்சிங் சென்டர் வருமானத்தைக் கூட்டுவதும் மேதாவிகள் கொண்டு வரும் நுழைவுத் தேர்வின் நோக்கம். அனிதாக்களின் மரணத்தை ஒரு கொட்டாவியுடன் இவர்கள் கடக்கிறார்கள். ‘எல்லோர்க்கும் சமமான கல்வி’ என்பது சுதந்திரப் போராட்ட முழக்கங்களில் ஒன்று. தமிழக அரசு உருவாக்கி இருக்கும் கல்விக் குழு சுதந்திரப் போராட்ட முழக்கத்தையும் மறக்காது; நீட் தேர்வால் மடிந்த கண்மணிகளையும் மறக்காது.

கல்வி தனியார் மயமாவதைத் தடுத்து நிறுத்தும் விதமாகத் தமிழக மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படுமா?

பொறுத்திருந்து பார்ப்போம். இதற்குச் சுருக்கமாகவும் பதில் சொல்ல முடியாது. ஒரு ஜனநாயகக் கல்வி அமைப்பில் தனியாருக்கான இடம் எது என்பது நிச்சயம் தெளிவாகும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் கற்றல் இடைவெளி மட்டுமல்லாமல் குடிப்பழக்கம், போதை பழக்கம், கடுங்கோபம் கொண்டு ஆசிரியர்களிடம் வன்முறையில் ஈடுபடுதல் போன்றவை இரு பாலர் குழந்தைகளிடமும் அதீதமாக வெளிப்படுவது மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்திருக்கிறதே..?

கரோனா நம் வாழ்க்கைப் போக்கில் பெரும் மாற்றங்களை உருவாக்கி இருப்பது உண்மை. இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. மகத்தானது மனிதச் சந்திப்பு. அது கரோனாவில் குறைந்தது. அதன் காரணமாக, பிள்ளைகள் சிலரிடம்- சிலரிடம்தான்- வித்தியாசமான போக்குகள் உருவாகி இருக்கின்றன. அந்தப் போக்குகளைத் தாங்கும் சக்தி வகுப்பறைக்கு இல்லை. வகுப்பறைகள் பதறுகின்றன. குழந்தைகளைச் சமாளிக்கவே பழகி இருக்கின்றன வகுப்பறைகள்; உருவாக்கப் பழகவில்லை. உருவாக்குவோர்க்குப் பொறுமை இருக்கும்; புதிய பார்வை இருக்கும். Let the instructor grow with the learner- என்று நாங்கள் சொல்வதுண்டு.

கற்போர் வளரும்போது ஆசிரியரும் வளர வேண்டும். மாணவர்கள் மாறும் போது ஆசிரியரும் புதிய வடிவம் எடுக்க வேண்டும். இன்றைய சூழலை உணராமல் நின்ற இடத்திலேயே பிடிவாதமாக நின்று கொண்டிருக்கக் கூடாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE