பதநீர் விற்றாவது பிள்ளைகளைப் படிக்க வைப்போம்!

By என்.சுவாமிநாதன்

பிள்ளைகளைப் படிக்க வைக்க பெற்றோர்கள் பலரும் கடும் சிரத்தை எடுப்பதையும், சிலர் அதற்கெனவே நாளும் பொழுதும் கஷ்டப்பட்டு உழைப்பதையும் பார்த்திருப்போம். ஆனால், தங்கள் கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த குழந்தைகளின் அறிவுக் கண் திறக்க ஒரு ஊரே கூடி, தேர் இழுக்கும் முன்னெடுப்பு தூத்துக்குடி மாவட்டம், அந்தோணியார்புரம் கிராமத்தில் நடந்துவருகிறது.

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது கிலோ மீட்டரில் இருக்கிறது அந்தோணியார்புரம். இங்கு கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் இயங்கும் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி உள்ளது. இது முன்பு, ஆரம்பப் பள்ளியாக இருந்தது. காலப்போக்கில் கிராம மக்கள் இதில் 6, 7, 8 -ம் வகுப்புகளையும் உருவாக்கி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினர். 5 -ம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளியாக இருப்பதால் அந்த வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் அரசு சம்பளம் தருகிறது. அதற்கு மேல் உள்ள மூன்று வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு கிராம மக்களே சம்பளம் தருகிறார்கள். எப்படி தெரியுமா? ஊருக்குப் பொதுவில் பதநீர் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு!

ஆச்சரியமான இந்தத் தகவல் கிடைத்ததுமே அந்தோணியார்புரம் கிராமத்துக்கு நாமும் ஒரு விசிட் அடித்தோம். ஊருக்குள் நுழைந்ததுமே, ‘கல்வி வளர்ச்சிக்காக ஊர்மக்களால் நடத்தப்படும் பதநீர் விற்பனை நிலையம்’ என்னும் பதாகையுடன் கூடிய, கூரை வேய்ந்த கடை இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் அந்த பதநீரின் தரம்கருதி விரும்பி வந்து வாங்கி அருந்திவிட்டு வீட்டுக்கும் வாங்கிச் செல்கிறார்கள். ஒரு லிட்டர் பதநீர் 90 ரூபாய் என விற்றுக் கொண்டிருந்த விற்பனையாளர் அந்தோணி விசுவாசத்திடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். நமக்கும் ஒரு கிளாஸ் பதநீரை தந்துவிட்டு உற்சாகம் ததும்ப பேசத் துவங்கினார்.

அந்தோணி விசுவாசம்

“இந்த பள்ளிக்கூடத்தில் நடுநிலை வகுப்புகளில் மட்டுமே 90 குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்களுக்காக வகுப்புக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் மூன்று ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள். ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் சம்பளம். ஊர்க்கமிட்டியால் நியமிக்கப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கும் சேர்த்து மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் தரவேண்டும். இதற்காக, வருசத்துக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இதை எப்படி நாங்கள் ரெடிசெய்வது?

எங்கள் ஊரில் பனை மரங்கள் அதிகமாக இருந்தாலும் பனை சார்ந்த தொழில் செய்பவர்கள் 8 பேர் தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் சொந்தமாக பனைமரத் தோட்டங்களும் உள்ளது. இருபது வருஷத்துக்கு முந்தி இந்த ஆசிரியர்களுக்கு மாதம் தலா 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தோம். அப்போது இருந்த ஊர் கமிட்டி, நம் ஊரில் பனை மரங்கள் அதிகம் என்பதால் விவசாயிகளிடம் இருந்து நாமே பதநீரைக் கொள்முதல் செய்து வியாபாரம் செய்து அதில் வரும் வருமானத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம் என தீர்மானித்தது. அன்றைக்கு ஆரம்பித்த பழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

இந்த ஆண்டு மார்ச் கடைசியில் தான் கடையை ஆரம்பித்தோம் ஜூலை வரை சீசன் இருக்கும். இந்த நான்கு மாதமும் நடக்கும் வியாபாரத்தில் எனது சம்பளம் உள்பட எல்லா செலவுகளும் போக மொத்தமாக 2 லட்ச ரூபாய்க்கு குறையாமல் கையில் நிற்கும். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 லிட்டர் வரைக்கும் விற்கும். சில நேரங்களில் சரியாக விற்காமல் தேங்கிவிடுவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில் பதநீரைக் காய்ச்சி கருப்பட்டியாக வார்த்து விற்றுக் காசாக்கிவிடுவோம்” என்றார் அந்தோணி விசுவாசம்.

பதநீர் வியாபாரத்தில் கிடைக்கும் 2 லட்ச ரூபாய் போக எஞ்சிய 1 லட்சத்து 60 ஆயிரத்தை திரட்ட இந்த ஊர் மக்கள் இன்னொரு வளமான திட்டத்தையும் வைத்திருக்கிறார்கள்.

பள்ளி வளாகம் ...

இந்த கிராமத்தில் மொத்தம் 450 வீடுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஊர்க்கமிட்டியே 30 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குகிறது. இதை அவர்கள் 36 ஆயிரம் ரூபாயாக மாதத் தவணையில் திருப்பிச் செலுத்தவேண்டும். இதில் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு ஆசிரியர்களின் சம்பளம், பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுதல் உள்ளிட்ட காரியங்களைச் சமாளித்து வருகிறார்கள்.

இதுபற்றியும் நம்மிடம் பேசிய அந்தோணி விசுவாசம், “அரசாங்கம் எப்படி பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்குகிறதோ அதேபோல் எங்கள் கிராமம் தன்னிறைவு பெற ஊர்க்கமிட்டி பெரிய பங்களிப்பு செய்துவருகிறது. கரோனா காலத்தில் பள்ளிக்கூடம் திறக்காத போதும் எங்கள் ஆசிரியர்களுக்கு நாங்கள் சம்பளம் வழங்கினோம்.

ஆர்.சி டயோசீஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி இது. எங்கள் ஊரிலிருந்து 6-ம் வகுப்புப் படிக்கும் குழந்தைகள் புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு பக்கத்து ஊர் பள்ளிக் கூடத்திற்குச் செல்ல பஸ்பிடிக்க நின்ற காட்சி எங்களுக்கு சங்கடத்தைக் கொடுத்தது. குறைந்தது எட்டாம் வகுப்பு வரையாவது இவர்கள் உள்ளூரில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் வசதியாக இருக்கும்; இடைநிற்றலையும் தவிர்க்கலாம் எனத் தோன்றியது. இது விஷயமாக டயோசீசபில் பேசினோம். ‘ 6,7, 8 வகுப்புக்கு ஆசிரியர்கள் போட்டு நீங்களே சம்பளம் கொடுக்க இயலுமா?’ அவர்கள் எனக் கேட்டார்கள். உடனே சம்மதித்து விட்டோம். இருபது வருஷத்தை இப்படியே நாங்கள் சமாளித்து விட்டோம். இனியாவது நடுநிலைப் பள்ளியையும் அரசு உதவிபெறும் பள்ளியாக மாற்றிக் கொடுத்தால் நல்லது” என்றார்.

அந்தோணியார்புரம் ஊர்க்கமிட்டித் தலைவர் சிலுவை அந்தோணி, செயலாளர் அந்தோணி சார்லஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடங்கி கடைக்கோடி சாமானிய மக்கள் வரை இந்தப் பள்ளிக்கூடம் திறம்படச் செயல்பட தங்கள் பங்களிப்பை தவறாது செலுத்தி வருகின்றனர். கல்வியின் அருமை பெருமை உணர்ந்து தங்கள் ஊர் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க பதநீர் விற்றுப் பணம் திரட்டும் அந்தோணியார்புரத்து மக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE