மூக்குடி அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம்: முன்னாள் மாணவர் தாராளம்!

By KU BUREAU

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் அரசின் திட்டத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு தனது பங்களிப்பாக ரூ.10 லட்சத்தை அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் மாணவர் வழங்கியுள்ளார்.

அறந்தாங்கி அருகே பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி, அனைத்து வகுப்பறைகளிலும் ஏ.சி, ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட வசதிகளுடன் முன்மாதிரிப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியைப் பார்வையிட்ட பிறகு, அங்கு கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தில் (மூன்றில் ஒரு பங்கு தொகையை தனியாரும், 2 பங்கை அரசும் செலுத்துதல்) மூக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

மொத்தம் ரூ.30 லட்சம்மதிப்பில் வகுப்பறைக் கட்டிடம் கட்டுவதற்காக மூக்குடியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் செந்தில்குமார் என்பவர் ரூ.10 லட்சத்தை வங்கி வரைவோலையாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) கூ.சண்முகத்திடம் வழங்கினார். அப்போது, பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீ.ஜோதிமணி, மூக்குடி பள்ளியின் தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் செந்தில் குமார் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அரசுப் பள்ளியை மேம்படுத்துவதற்காக தாமாக முன்வந்து ரூ.10 லட்சம் நிதியுதவி செய்த செந்தில்குமார் குடும்பத்தினரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் பாராட்டியதுடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.10 லட்சத்துக்கான வங்கி வரை வோலையை வழங்கிய மூக்குடியைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்டோர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE