பள்ளிக் கல்வித்துறைக்கு `பளிச்' யோசனை

By கரு.முத்து

புதிய அரசு பதவியேற்றவுடன் பள்ளிக்கல்வித்துறையில் வேகமான பல மாறுதல்கள் நடைபெற்று வருகின்றன. நிர்வாக ரீதியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் மட்டுமே இயங்கிவரும் இணை இயக்குநர் அலுவலகங்களை மண்டல வாரியாக பிரித்து அமைத்திட வேண்டும், அதன் மூலம் மிக எளிதாக பள்ளிக்கல்வித்துறையை நிர்வகிக்க முடியும் என்ற பளிச் யோசனையை முன் வைக்கிறார் அரசு பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான சிகரம் சதீஷ்குமார்.

இது குறித்து ஒரு விரிவான திட்ட அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அவர் சமர்ப்பித்திருக்கிறார். அது குறித்து சதீஷ்குமாரிடம் பேசினேன். "பள்ளிக்கல்வித் துறையில் இன்றைக்கு நிறைய மாற்றங்கள் வந்து சேர்ந்துவிட்டன. புதிய பாடத்திட்டம், நிறைய தொழில்நுட்பம், மாணவர்களைத் தேடிக் கல்வி எனப் புதிய புதிய பரிமாணங்களோடு பள்ளிக்கல்வித்துறை பயணிக்கிறது.

எல்லாம் கொடுத்தும் தரமான கல்வியை உறுதி செய்வதில், மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதில் நிறைய சவால்களை இன்னும் கடக்க வேண்டியிருக்கிறது. மாணவர்களுடைய கற்றலை வலுப்படுத்த வேண்டிய நாம், மாணவர்களது தேர்ச்சியை எளிதாக்கிவிட்டோம். எல்லாவற்றிற்கும் நுழைவுத்தேர்வு என வந்துவிட்ட காரணத்தால் பாடங்களைத் தெளிவுறக் கற்பதைவிட, நுழைவுத்தேர்வுக்கு தன்னைத் தயார்செய்வதே முதன்மையான பணியாக மாணவர்களது மனப்பான்மையாக மாறிவிட்டது.

அத்தோடு இன்றைய மாணவர்களிடம் கல்வியைப் பற்றிய கவலையும் இல்லை, தேர்ச்சியைப் பற்றிய பயமும் இல்லை. இத்தனைக்கும் மத்தியில் கல்வியின் தரத்தை , கற்றல் அடைவை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் பள்ளிக்கல்வித்துறைக்கு நிறையவே இருக்கிறது. பள்ளிக்கல்வித் துறையின் மொத்த அதிகார மையமாக தலைநகர் சென்னை மட்டுமே திகழ்வது என்பது கல்வியை முன்னெடுத்துச் செல்வதை கடினமாக்குவதில் ஒன்றாகத் திகழ்கிறது.

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்களோடு சேர்த்து மொத்த இணை இயக்குநர்களும் அங்கிருந்து மாநிலத்தின் மொத்தப் பள்ளிகளையும் நிர்வகிப்பது என்பது பலனளிக்காத ஒன்றாகவே அமைகின்றது. உயர்கல்வித்துறையைப் போல, மற்ற பிற துறைகளைப்போல மண்டல அளவில் இணை இயக்குநர்களை நியமித்து, மண்டல அலுவலகங்களை ஏற்படுத்துவதென்பது, கற்றல் கற்பித்தல் குறைபாடுகளை சரிசெய்ய பெரும் வாய்ப்பாக அமையும்.

எல்லா இணை இயக்குநர்களும் மாநிலம் முழுவதும் சுற்றி வருவதற்கும் ஓர் இணை இயக்குநருக்கு குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் என அதற்குள்ளேயே ஆய்ந்து பார்ப்பதற்கும் பெரும் வித்தியாசமிருக்கிறது. மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு ஓர் இணை இயக்குநர் என இணை இயக்குநர்களை நியமித்து, அந்தந்தப் பகுதியில் மண்டல அலுவலகங்களை ஏற்படுத்தினால், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இணைந்து, தேர்ந்த திட்டமிடல்களுடன் பள்ளிக்கல்வித்துறை பெரும் பலன்களை அறுவடை செய்யமுடியும்.

மாணவர்களது நடத்தைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டன. பள்ளி, அலுவலகங்கள் என பலநிலைகளிலும் பாலியல் அத்துமீறல்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டன. இதுசார்ந்த பிரச்சினைகளில் எல்லாம் உடனடி முடிவெடுக்கவும், பிரச்சினைகள் சார்ந்து தீர்வுகளை விரைவில் தேடவும் மண்டல இணை இயக்குரகங்கள் அவசியம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஏதேனும் புதிய கற்பித்தல் உத்திகளைப் பரிசோதித்து பார்ப்பதென்றாலும், குறிப்பிட்ட இணை இயக்குநர்கள் தலைமையில் பரிசோதனை முயற்சியாகவும், ஒரே நேரத்தில், வெவ்வேறு மாவட்டங்களில், வெவ்வேறு அணுகுமுறைகளை பரிசோதித்துப் பார்க்க முடியும்.

நிதியில்லாத நேரத்தில் இதனால் பெரும் நிதிச்சுமை ஏற்படுமோ என அரசு அச்சப்படவும் தேவையில்லை. ஒரு ரூபாய்கூட செலவில்லாமல், ஒரே ஒரு புதிய பணியிடம்கூட ஏற்படுத்தாமல் இதனை ஓர் உத்தரவு மூலம் 100% செயல்படுத்த முடியும்.

அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கையின்றி இருக்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை ஏற்படுத்த முடியும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களை இணை இயக்குநருக்கு கீழ் அதிகாரிகளாக நியமனம் செய்து, கல்வித்தரத்தை ஆய்வு செய்யும் பணிக்கும், தரமான கற்றல் கற்பித்தலை உறுதி செய்யவும் மாவட்டத்திற்கு ஏற்ற செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ளமுடியும்.

புதிய கட்டிடம் தேவையில்லை. புதிய பணியிடம் தேவையில்லை, புதிதாக ஊதிய நிர்ணயம் தேவையில்லை. ஒரே உத்தரவில் பள்ளிக்கல்வி பளிச் கல்வியாக மாறுவதற்கு ஒரு முயற்சியை மேற்கொண்டு பார்க்கலாம். முயற்சிகள் தவறலாம். ஆனால் ஒருபொழுதும் முயற்சிக்க தவறக்கூடாது" என்று தனது திட்டம் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்.

அருமையான இந்த திட்டம் குறித்து அரசு பரிசீலிக்கலாமே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE