சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் இறுதி பருவத் தேர்வுகளை தாமதமின்றி நடத்தி குறித்த காலத்தில் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சில உயர் கல்வி நிறுவனங்களில் இறுதி பருவத்துக்கான தேர்வுகளை தாமதமாக நடத்துவதால் மதிப்பெண் பட்டியல், பட்ட நிறைவுச் சான்றிதழ் போன்றவை குறித்த காலத்துக்குள் கிடைப்பதில்லை.
இதனால் சிறந்த நிறுவனங்களில் கிடைத்த பணி வாய்ப்புகளை இழக்க நேரிடுவதுடன், பட்ட மேற்படிப்புகளில் சேருவதிலும் சிக்கல் ஏற்படுவதாக யுஜிசிக்கு புகார்கள் வந்துள்ளன. எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு யுஜிசி விதிகளின்படி இறுதி பருவத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்ட 180 நாள்களுக்குள் அவர்களுக்கான சான்றிதழ்கள் உயர் கல்வி நிறுவனங்களின் சார்பில் வழங்கப்பட வேண்டும்.
இதனைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
» சென்னையில் அதிகரித்த லாரி குடிநீர் விநியோகம்: 3 மாதங்களில் 3.48 லட்சம் லாரி நடைகள் இயக்கம்
» கோவை - சென்னை ‘கோவை விரைவு ரயில்’ ஜூன் 26 வரை பெரம்பூர் வரை மட்டுமே இயக்கம்