அரசுப் பள்ளியில் வரலாற்று ஆய்விருக்கை

By கரு.முத்து

தமிழகத்திலேயே முதல் முறையாகவும், ஒரு முன்னோடி முயற்சியாகவும் பல்கலைக்கழகங்களில் உள்ளதுபோல அரசுப் பள்ளியிலும் வரலாற்று ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது.

பொதுவாக மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் தமிழ், வரலாறு, இலக்கியம் உள்ளிட்டவைக்காக ஆய்வு இருக்கைகள் தொடங்கப்படுவது வழக்கம். பள்ளிகளில் அப்படி இருக்கைகள் தொடங்குவது இதுவரையிலும் வழக்கில் இல்லை. அவ்வாறிருக்க திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் முறையாக நாட்டிலேயே முன்னோடியாக வரலாற்றில் இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஆசிரியரும் ஆய்விருக்கை வழிகாட்டியுமான ஆதலையூர் சூரியகுமார் கூறுகையில், "பொதுவாக ஆய்வு இருக்கைகள் பல்கலைக்கழகங்களில் மட்டுமே அமைக்கப்படும். ஆய்வு இருக்கை என்பது பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியரின் கீழ் 10 மாணவர்கள் ஒரு தலைப்பை ஒட்டி ஆய்வு செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பது ஆகும். உதாரணமாக தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் பாரதியார் ஆய்வு இருக்கை, பாரதிதாசன் ஆய்வு இருக்கை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்விருக்கை அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காகவும் ஆய்வுகளின் இறுதியில் நல்லதொரு முடிவைக் கொண்டு வருவதற்காகவும் இப்படிப்பட்ட ஆய்வு இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. இது போன்று ஆய்வுத்திறனை பள்ளிப் பருவத்திலேயே ஏற்படுத்துவதற்காக எங்கள் பள்ளியில் இப்போது 'கரிகாலன் வரலாற்று ஆய்வு இருக்கை' அமைக்கப்பட்டுள்ளது.

சேர பாண்டியர் மற்றும் 11 வேளிர் குலத் தலைவர்களை வெண்ணிப் போரில் வென்றவன் கரிகாலன்.‌ அந்த வெண்ணிப் போர் நடந்த வெண்ணி நதிக்கரையில் இப்பள்ளி அமைந்திருப்பதால் கரிகாலன் ஆய்வு இருக்கையை
தொடங்கியிருக்கிறோம்'' என்று கரிகாலன் பெயரால் ஆய்விற்கு தொடங்கப்பட்டதன் காரணத்தை விளக்கினார் ஆதலையூர் சூரியகுமார்.

மேலும் அவர், ``கரிகால்சோழன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஒப்பற்ற ஆட்சி நடத்தியவன்.‌ நீர்வளம் பெருக்கியவன்.‌ கைத்தொழில் வளர்த்தவன், உலகத்திற்கே மிகச் சிறந்த நீர் மேலாண்மையை வழங்கியவன்.‌ இப்படி புகழ்பெற்ற கரிகால் சோழன் பற்றிய செய்திகளை வருங்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்வது பல வகையிலும் பயனுள்ளதாக இருக்கும்.‌ எனவே கரிகாலன் பற்றிய ஆய்வுகளை எமது பள்ளி மாணவர்கள் 10 பேர் பத்து தலைப்புகளில் மேற்கொள்கிறார்கள்.

கரிகாலன் வரலாற்றைக் கூறும் நூல்கள், கல்லணையின் சிறப்புகள், கரிகாலனை அறிய உதவும் ஆதாரங்கள், கல்லணை, கரிகாலனின் கொடைத்தன்மை, கல்லணை வரைபடம், கரிகால் சோழனின் சமகாலத்தவர்கள், கரிகாலன் பெயர்க்காரணம், இலக்கியங்களில் கரிகாலன், நாங்கூர் கல்வெட்டு ஆகிய தலைப்புகளில் காயத்ரி, லாவண்யா, ஆசிகா, ஜெயந்தி, அட்சயா, தமயந்தி, சபியா சிரின், தீபிகா, கனிஷ்கர், லோகேஷ் குமார், ஆகிய மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். கள ஆய்வுகள் எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வரலாற்று நூல்களைப் படித்து மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவார்கள்.

இப்போது மாணவர்கள் ஆய்வு சுருக்கங்களை வழங்கியிருக்கிறார்கள். ஓராண்டு ஆய்வுக்குப் பிறகு முழுநீள ஆய்வுக்கட்டுரையை வழங்குவார்கள். அந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'கரிகாலன் கண்ட காவிரிக்கரை நாகரீகம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்படும். பள்ளியில் பயிலும் போதே மாணவர்கள் இது போன்ற ஆய்வுகளில் ஈடுபடுவது பிற்காலத்தில் அவர்களது ஆராய்ச்சி சார்ந்த அறிவை மேம்படுத்தும்" என்று சொல்லி முடித்தார்.

ஆய்வு இருக்கையில் இடம் பெற்று ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஆய்வுக் குழுத் தலைவருமான ஐரன்பிரபா வேண்டிய உதவிகளை செய்து தருகிறார். இந்த பள்ளியின் முன்னோடி முயற்சியை மற்ற பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மனமுவந்து பாராட்டுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE