மீண்டும் அஸ்ரா கார்க்: யாரென்று தெரிகிறதா?

By கே.கே.மகேஷ்

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் கவனம் பெற்றிருக்கிறது. இதில், மத்திய பணியில் இருந்து திரும்பியிருக்கும் அஸ்ரா கார்க் தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டிருப்பது, மதுரை முதல் நெல்லை வரையில் பேசுபொருளாகியிருக்கிறது. காரணம், அவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர்.

2006 முதல் 2011 வரையிலான கால கட்டம் மதுரை மு.க.அழகிரியின் கோட்டையாக இருந்த காலம். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினே மதுரையில் ஏதாவது நிகழ்வு என்றால் தவிர்க்கும் அளவுக்கு அழகிரியின் கை ஓங்கியிருந்த காலம். அந்த நேரத்தில் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. தேர்தல் ஆணையத்தின் கைக்கு அதிகாரம் போனதும், மதுரையில் யாரை போட்டால் தேர்தலை அமைதியாக நடத்தலாம் என்று யோசித்தவர்கள், மதுரை மாவட்ட கலெக்டராக உ.சகாயம் ஐஏஎஸ், கமிஷனராக கண்ணப்பன் ஐபிஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அஸ்ரா கார்க் எஸ்பி ஆகியோரை நியமித்தது.

இவர்களது அதிரடிக்கு முன்னால் மு.க.அழகிரியின் தேர்தல் வியூகங்கள் எல்லாம் தோற்றுப்போயின. அதற்கு முன்பு நடந்த மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, அதிமுகவினரை ஓட ஓட விரட்டிய திமுகவினர், 2011-ல் அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது. தேமுதிகவினர் கூட, திமுகவின் முக்கிய நிர்வாகிகளை பணமும் கையுமாக பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார்கள். அந்தத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக படுதோல்வியைச் சந்தித்தது.

இந்தப் பணியை மெச்சும் விதமாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தேர்தல் ஆணையம் நியமித்த இந்த அதிகாரிகளையே மதுரையில் தொடரச் செய்தார். அழகிரி ஆதரவாளரான பொட்டு சுரேசை கைது செய்து தரையில் அமர வைத்த பெருமை அஸ்ரா கார்க்குக்கு உண்டு. ஆட்சி அதிகாரம் இருந்தபோது ஒரு பெண் போலீஸ் அதிகாரியை மிகக்கேவலமான வார்த்தைகளால் பொட்டு சுரேஷ் திட்டியிருந்த தகவலை அறிந்த அஸ்ரா கார்க், அதே பெண் போலீஸை வைத்து பொட்டு சுரேஷ் வழக்கை பதிவு செய்ய வைத்தார். அந்தப் பெண் அதிகாரி முன்பு தரையில் உட்கார வைக்கப்பட்டிருந்தார் பொட்டு.

ஆனால், இந்த மூவர் கூட்டணி தொடரவில்லை. கலெக்டர் சகாயத்துக்கும், எஸ்பி அஸ்ரா கார்க்குக்கும் இடையே ஈகோ யுத்தம் மூண்டது. மகளின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக கணவனை கொன்ற பெண்ணை வழக்கு கூட இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்தார் அஸ்ரா கார்க். அதை சகாயம் விமர்சித்தார். சகாயத்தின் மாமனார் மீது வந்த புகாரை விசாரிப்பதில் ஆர்வம் காட்டினார் அஸ்ரா கார்க். இந்த மோதல் காரணமாக இருவருமே பணிமாற்றம் செய்யப்பட்டார்கள். ஆனாலும்கூட, தர்மபுரியில் பாமகவினர் கலவரம் நடத்திய காலத்தில் அங்கு எஸ்பியாக பணியாற்றி நல்ல பெயர் வாங்கினார் அஸ்ரா கார்க்.

இப்போது அவரே தென் மண்டல ஐஜியாக மதுரையில் பொறுப்பேற்க இருப்பதை மதுரை மக்கள் ஆர்வமுடன் கவனிக்கிறார்கள். திமுகவினருக்குப் பிடிக்காத அவர் எதற்காக மதுரைக்கு கொண்டு வரப்படுகிறார், ஐஜி ஜாங்கிட்டின் அனுதாபி என்பதால் அவருக்கு இந்தப் பதவி கிடைத்ததா? அல்லது வேறு ஏதேனும் திட்டமிருக்கிறதா என்று போலீஸ்காரர்களும் இதுபற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE