தமிழக அரசின் இலவச நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகள்: வழிமுறைகள் வெளியீடு

By சி.பிரதாப்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் மாலை வேளையில் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ''தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அவர்கள் பயிலும் பள்ளி அளவில் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை திட்டமிட்டு ஒருங்கிணைத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்துக்கும் 2 பாட வல்லுநர்கள் வீதம் 10 ஆசிரியர்கள் அடங்கிய குழுவை அமைக்கவேண்டும். இதில், அனுபவம் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். மேலும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களில் போட்டித் தேர்வுகள் எழுத ஆர்வமுள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.

இந்த போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பெரும்பாலான மாணவர்களை ஊக்கப்படுத்தலாம். ஆனால், ஒருபோதும் கட்டாயப்படுத்தக் கூடாது. இதுதவிர ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை-தாவரவியல், கணிதம், செவ்வாய்க்கிழமை- இயற்பியல், புதன்கிழமை- விலங்கியல், கணிதம், வியாழன்- வேதியியல், வெள்ளி- மீள்பார்வை ஆகிய பாடங்களை அடிப்படையாக வைத்து பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து வேலைநாட்களிலும் பாடவாரியாக மாலை 4 முதல் 5.15 மணி வரை பயிற்சி வகுப்புகள் கால அட்டவணைப்படி நடத்தப்பட வேண்டும்.

அதேபோல், பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள், ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகள், முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி அளித்திட மாநில ஒருங்கிணைப்புக்குழு உதவிசெய்யும். மேலும், பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகம் வழியாகவும் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE