சென்னை: நடப்பாண்டு ஜூன் பருவத்துக்கான யுஜிசி நெட் தகுதித் தேர்வை 9.08 லட்சம் பட்டதாரிகள் எழுதியுள்ளதாக என்டிஏ தகவல் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் நடத்தப்பட்டது.
நெட் தேர்வை எழுத பெண்கள் 6 லட்சத்து 35,587 பேரும், ஆண்கள் 4 லட்சத்து 85,579 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 59 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9 லட்சத்து 8,580 (81%) பட்டதாரிகள் தேர்வில் கலந்து கொண்டனர். மொத்தமுள்ள 83 பாடங்களுக்கு காலை, மாலை என இரு சுற்றுகளாக தேர்வுகள் நேரடி முறையில் நடைபெற்றன. தொடர்ந்து விடைத்தாள் திருத்துதல் பணிகளை துரிதமாக முடித்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் தகவல்களை ugcnet.nta.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல், நடப்பாண்டு முதல் நெட் தகுதித் தேர்வின் அடிப்படையில் பிஎச்டி மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளவும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
» ராகுலின் 54-வது பிறந்தநாள்: தூய்மைப் பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய செல்வப்பெருந்தகை