அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் மாணவர்களின் நலனுக்காகவும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஆசிரியர் பணிமாறுதல் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, அரசுப்பள்ளிகளின் தரம் குறித்தும் அங்கு பயிலும் மாணவர்களின் நலன் சார்ந்து ஆசிரியர்களின் செயல்பாடுகள் மற்றும் தகுதி குறித்தும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ‘அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கியபோதும் அவர்களின் செயல்பாட்டில் திருப்திகரம் இல்லை. தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருகிறது. இதற்கு ஆசிரியர்களின் செயல்பாட்டினை கண்காணிப்பது அவசியம். ஆசிரியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இதர தொழில்களில் ஈடுபடுகின்றனரா என்பது உட்பட அவர்களது செயல்பாடுகளை பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பது அவசியம்.
அவ்வாறு வேறு தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்துவதுடன், தகுதியற்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு நிர்வாகத்தில் தலையிடும் ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலரை வழக்கில் சேர்க்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.