ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு நியாயம் வேண்டும்

By கரு.முத்து

“கடந்த மூன்று ஆண்டுகளாக தோற்கடிக்கப்படும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நியாயம் வழங்க வேண்டும்” என கல்வியாளர் சங்கமம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனரும் ஆசிரியருமான சிகரம் சதீஷ்குமார் கூறியதாவது:

“நீட் தகுதித்தேர்வில் தோல்வி அடைவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி அடைவதெல்லாம் அறியாத பாடத்திட்டம், புரியாத பாடத்திட்டம் எனச் சொல்லி, தோல்வியை ஒரு பகுதியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். ஆனால் தாங்கள் இரண்டு ஆண்டுகளாகப் படித்து, நல்ல முறையில் தேர்வு எழுதிய, எழுதுகின்ற தேர்வுகளிலேயே கடந்த 3 ஆண்டுகளாகத் தோற்கடிக்கப்பட்டு வருகின்றனர் தமிழ்நாடு அரசின்கீழ் பயின்ற, பயிலும் ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவியர்கள்.

தனியார் பயிற்சி நிறுவனங்களில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் சேர்ந்திருந்தாலும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே சேர முடியும். ஆனால் அங்கு பயில்பவர்களுக்கும் அறிவே இல்லாததுபோல, கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுமுடிகள் 1 முதல் 5 சதவீத தேர்ச்சிகளுக்குள்ளாகவே வந்து கொண்டிருக்கின்றன.

விரிவுரையாளர்கள் தவறாக விடைத்தாட்கள் திருத்தியே மாணவர்கள் இதுவரை தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் பணிபுரியும் மொத்த விரிவுரையாளர்களில் 300 பேருக்கு மேல் கலந்துகொண்ட விடைத்தாள் திருத்தும் முகாமில், 181 நபர்களுக்குமேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது கடந்த கால அரசுத் தேர்வுத் துறை. இது ஏறக்குறைய 60%-க்கும் அதிகமான விழுக்காடாகும்.

விடைத்தாள் திருத்துவதில் ஓரிருவர் தவறு செய்ய முடியும். ஆனால், ஒட்டுமொத்த நபர்களும் தவறு செய்துள்ளனர் எனக் கருதுவதென்பது, பழிவாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகவே கண்கூடாக உணர முடிகின்றது. ஆனால் பாவம், இதில் எதிர்காலத்தை இழந்து நிற்பது, பெரும் கனவோடு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்த, படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர்கள்தான்.

விரிவுரையாளர்கள் மோசடியில் ஈடுபட, இது ஒன்றும் பணிவாய்ப்பு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு அல்ல என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டியிருக்கின்றது. இது, ஆண்டு இறுதித்தேர்வு மட்டுமே ஆகும். ஆனால் அதையே மூன்று ஆண்டுகளாக எழுதி, எழுதி களைத்துப் போயிருக்கின்றனர் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்.

ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு, வளநூல் என்கிற வகையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாறாத பாடத்திட்டத்தை வைத்து பாடம் நடத்திவருவதோடு, விடைத்தாள் கீ புக் ஒன்றை வழங்கி அதில் இருந்து ஒரு வார்த்தை மாறினாலும் மதிப்பெண் வழங்கக் கூடாது. ஆசிரியருடைய கற்பித்தலையும், கற்பித்தல் முறையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என எவரும் வரையறுத்துவிட முடியாது.

அது கல்வி உளவியல் மற்றும் புதுமை புனைதலின் அடிப்படையில் தனியரின் திறமையடிப்படையில் மாறுபடும். ஆனால் திருத்தும் முறையில் குறையும், திருத்துபவருக்கு தண்டணையும் கொடுத்து ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் எதிர்காலத்தின் மீது பெரும் தாக்குதலை அரசுத் தேர்வுகள் துறை நடத்திக்கொண்டிருப்பதை, உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்த 17 ஆண்டுகளாக சரியாகச் சென்றுகொண்டிருந்த மதிப்பீட்டில், 3 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து மட்டும் ஏன் பிரச்சினை என விசாரித்தால், விடைத்தாள் திருத்தும் மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட பணப்பலன் சார்ந்த பிரச்சினையின் காரணமாக, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களை பழி வாங்குகின்றேன் என்னும் பெயரில் இப்படி நடப்பதாக தெரிய வருகிறது. இதன்மூலம் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்களைத் தொடர்ந்து தோல்வி அடையச் செய்து, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையிலும் மண் அள்ளிப் போட்டுவிட்டது கடந்தகால அரசுத் தேர்வுகள் துறை. ஆனால் அது இன்னமும் நீடித்துக் கொண்டிருப்பது பெரும் சோதனை மட்டுமல்ல வேதனை.

வருங்காலத் தலைமுறையை வளமான தலைமுறையாக மாற்றும் வல்லமை படைத்த ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களுக்கும் தற்போதைய தமிழக அரசு தகுந்த நியாயம் வழங்குவதன் மூலம் அவர்களுக்கான விடியலைத் தர வேண்டும்” என்று சிகரம் சதிஷ்குமார் கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE