நாட்டின் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட், நியமனமான வேகத்தில் சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கிறார். மேலும் உயர்கல்வி நிலையங்களைக் காவி மயமாக்க முயல்வதாய், பாஜக அரசின் மீது தொடரும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் குறித்த சர்ச்சைகள் வலு சேர்த்துவருகின்றன. சென்னை பின்னணியில் தன்னை முன்னிறுத்தும் சாந்திஸ்ரீ குறித்தும், அவரை வட்டமிடும் சர்ச்சைகள் குறித்தும் கடந்த ஒருவாரமாக ஏராளமான கேள்விகள் நாடுமுழுக்க ரீங்காரமடிக்கின்றன.
உலகப் புகழ் பல்கலைக்கழகம்
டெல்லியில் அமைந்திருக்கும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பிப்.7 அன்று நியமிக்கப்பட்டார் சாந்திஸ்ரீ. அவர் பணியேற்ற சிலமணி நேரங்களில், ட்விட்டர் இந்தியா பற்றிக்கொண்டது. நெட்டிசன்கள் பரபரப்படைய, சாந்திஸ்ரீ ட்ரெண்டிங்கில் முன்னேறினார்.
ஜேஎன்யூ பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் புகழ் வாய்ந்தது. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் மாணவர்கள் விரும்பி வந்து சேரக்கூடியது. நாட்டின் மிகப்பெரும் சிந்தனையாளர்கள், முற்போக்காளர்களை உருவாக்கிய பெருமையும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு. அதேவேளை நாட்டின் நாடித்துடிப்பாய், எங்கே சிறுமை இடறினாலும், ஜேஎன்யூவில் மாணவர்களின் ஆட்சேபக் குரல் எதிரொலிக்கும். இங்கே படிப்பை முடித்தவர்கள் உலக அளவில் உயரிய பணிகளில் அமர்ந்ததோடு, அறிவுஜீவிகளாக, பத்திரிகையாளர்களாக, சமூகப் போராளிகளாகவும் பரிமளித்திருக்கிறார்கள்.
இந்தச் சிறப்புகளின் மணிமகுடமாக, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முதல் முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய நியமனம் இது. மாறாக பொதுவெளியில் அநேகர், சாந்திஸ்ரீக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர்.
கல்வி நிலையங்களில் படரும் காவி
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் நடைபெற்ற போராட்டங்களில் பரவலாக மாணவர்களும் பங்கெடுத்தனர். அவர்களில் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்றனர். இவர்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகளின் மாணவர் அமைப்புகள் நேரடியாக மோதின. கலவரச் சூழல், காவல் துறை தலையீடு, மாணவர்கள் மீது நடவடிக்கை என ஜேஎன்யூ வளாகம் களேபரமானது.
இதன் தொடர்ச்சியாக உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கும் மாணவர் போராட்டம் குறித்து மத்திய அரசு கவலை கொண்டது. எனவே, டெல்லி ஐஐடி பேராசிரியராக இருந்த ஜெகதீஷ் குமார், ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் எதிர்பார்ப்புக்குரிய பல சீர்திருத்தங்களை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தவும், மாணவர்களை ’நல்வழிப்படுத்தவும்’ அவர் முயன்றார். அந்தச் சேவையைப் பாராட்டும் விதமாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பொறுப்புக்கு ஜெகதீஷ் குமார் உயர்த்தப்பட்டார்.
இதனால் காலியான ஜேஎன்யூ துணைவேந்தர் பொறுப்பில், தற்போதைய சாந்திஸ்ரீயின் நியமனம் நடந்திருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில், பாஜக அரசால் நியமிக்கப்படுவோரின் பின்னணி என்பது ஊரறிந்த ரகசியங்களில் ஒன்று. கல்வித் தகுதிக்கு இணையாக, தீவிரமான இந்துத்துவராக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. சாந்திஸ்ரீயும் அப்படித்தான் வந்தார். ஆனால், அதற்காக கடந்த சில ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட முயற்சிகளே தற்போதைய, அவருக்கெதிரான தூற்றுதல்களுக்கும் காரணமாகி உள்ளன.
சர்ச்சைப் பதிவுகள்
ஜேஎன்யூ துணைவேந்தராக சாந்திஸ்ரீ பதவியேற்ற தினத்தன்றே, கடும் கரிப்புகளுக்கு ஆளானார். அத்தனையும் அவரது பெயரிலான ட்விட்டர் கணக்கின் ஸ்க்ரீன் ஷாட்டுகள். அந்தப் பதிவுகளில் சர்ச்சைக்குரிய வகையில் எழுதியிருந்தார் சாந்திஸ்ரீ. கிறிஸ்துவர்கள் அரிசிக்காக மதம் மாறியவர்கள், இஸ்லாமியர்கள் லவ் ஜிகாதிகள், டெல்லி ஷாகின் பார்க் குடியுரிமை போராட்டக்காரர்கள் மனநலம் குன்றியவர்கள்... இப்படி சகட்டுமேனிக்கு அவர் பெயரிலான பதிவுகள் வெறுப்பை உமிழ்ந்திருந்தன.
அதுமட்டுமல்ல கோட்சேவின் குற்றத்துக்கு நியாயம் சேர்த்ததுடன், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மீதான தாக்குதலை ஆதரித்துள்ளார். சிறுபான்மை கல்லூரிகளுக்கான நிதியுதவியை நிறுத்த கோரியிருக்கிறார். இப்படி சாந்திஸ்ரீ பெயரிலான பதிவுகள் அனைத்திலும் காவிப்புயல் மையம் கொண்டிருந்தது. ஆனால் சாந்திஸ்ரீ அசரவில்லை. தேர்ந்த அரசியல்வாதியாய், தனக்கு ட்விட்டர் கணக்கே இல்லை என்று அதிரடித்தார்.
தொடரும் சர்ச்சைகள்
6 வருடங்களுக்கு முன்பே ட்விட்டர் கணக்கை அழித்துவிட்டதாக ஒரு இடத்தில் பேசியவர், இன்னொரு இடத்தில் என்னுடைய ட்விட்டர் கணக்கை எவரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று கூறியது, மேலும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. ஜேஎன்யூ துணைவேந்தராக ஒரு பெண் பதவியேற்பதை விரும்பாதவர்கள், குறிப்பாக ஜேஎன்யூவைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு செய்ததாக குற்றம்சாட்டினார். முன்பின் முரணாக தனது பேச்சு செல்வதை அடுத்து, ட்விட்டர் குறித்து பேசுவதைத் தவிர்த்தார். ஆனால் ட்விட்டர் களப்போராளிகள், சாந்திஸ்ரீயின் தனிப்பட்ட குடும்பப் பகிர்வுகளான புகைப்பட விவரங்களைத் தோண்டியெடுத்து, ட்விட்டர் கணக்கு அவருடையதுதான் என்பதை நிறுவினார்கள்.
அரசியல் சார்ந்தும், மத நம்பிக்கைகள் சார்ந்தும் தனிநபர்கள் கருத்து கொண்டிருப்பதும் அவற்றை சமூகவெளியில் பதிவு செய்வதும் தவறானதல்ல. ஆனால் பொறுப்பான அரசுப் பணியில் அமர்ந்திருப்பவர், உரிமைகளுக்காகப் போராடியவர்கள் மீது விஷம் கக்கியது, தற்போதைய கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது. இதுமட்டுமன்றி முன்னதாக அவர் பணியாற்றிய இடங்களில் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டது, அவை தொடர்பாக விசாரணைக் குழு விவரங்கள் ஆகியவையும் சர்ச்சைகளின் எண்ணிக்கையைக் கூட்டியிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவும், உயர் பதவிகளை எட்டவும் தனது ட்விட்டர் பதிவுகள் வாயிலாக அதிகார வர்க்கத்தினரின் கவனத்தை சாந்திஸ்ரீ கவர முயன்றதாகவும் குற்றச்சாட்டு நீள்கிறது.
காவி கரிசனம்
சாந்திஸ்ரீ மீது அதிகார வர்க்கத்தினர் ஆதரவு காட்ட காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இத்துத்துவத்தின் மீது அவரைவிட பிடிப்பு கொண்டவர்களும், தீவிர ஆதரவாளர்களும் இருக்கையில், சாந்திஸ்ரீக்கு முக்கியத்துவம் தரப்பட்டது ஏன் என்று பாஜகவினரே விவாதித்து வருகின்றனர். கடைசியில், சாந்திஸ்ரீயின் பின்னொட்டில் உள்ள ’பண்டிட்’ என்பதே அவர் மீதான கரிசனத்துக்கு காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். காஷ்மீரில் நிலத்தையும், வாழும் உரிமையையும் இழந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகளின் பிரதிநிதியாக பலரை பாஜக அரசு அரவணைத்து வருகிறது. அந்த வகையிலும் சாந்திஸ்ரீ துளிப்புரி பண்டிட் முன்னுரிமை பெற்றிருக்கிறார்.
சென்னை பின்னணியில் வளர்ந்த சாந்திஸ்ரீ, பிளஸ் 2 படிப்பில் மாநிலத்தின் முதன்மை மாணவி என்றும், மாநிலக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிப்புகளைத் தங்கப்பதக்க மாணவியாக நிறைவு செய்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசின் உயர்பொறுப்பு வகித்த தந்தை துளிப்புடி ஆஞ்சநேயலு, பேராசிரியராக ரஷ்யாவில் பணிபுரிந்த தாயார் ஆதிலஷ்மி என பெரும்படிப்பாளிகளின் மகளாக, படிப்பில் சூரப்புலியாக வளர்ந்த சாந்திஸ்ரீ, தான் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளாலும், அதை வெளிப்படுத்திய வகையாலும் தற்போதைய சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கிறார் என்றே விமர்சிக்கப்படுகிறது.
அவரது பெயரிலான ட்விட்டர் கணக்கு அழிக்கப்பட்டுவிட்டது. எனினும், அவர் குறித்த சர்ச்சைகள் அத்தனை எளிதில் அழியாது என்றே தெரிகிறது.