ஆளுநர் திருப்பியனுப்பிய நீட் மசோதாவை, ஒரே வாரத்தில் மீண்டும் நிறைவேற்றி அவருக்கே திருப்பியனுப்பியிருக்கிறது திமுக அரசு. சரி, உடனே நீட் ரத்தாகிவிடுமா? என்றால், மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரையில் அதற்கான வாய்ப்பு இல்லையென்றே தோன்றுகிறது.
அப்படியானால் மாணவர்களின் கதி?
தமிழக சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் (பாஜகவைத் தவிர) நீட்டை எதிர்க்கின்றன என்றாலும்கூட, இடைப்பட்ட காலத்துக்கான நிவாரணத்தை ஒரே ஒரு கட்சிதான் சட்டப்பேரவையில் பேசியிருக்கிறது. அது, அதிமுக கூட்டணியில் இருக்கும் புரட்சி பாரதம் கட்சி. அதன் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பேசும்போது, ”கடந்த அதிமுக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொடுத்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டை, 15 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதேபோல அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 7 சதவீதம், தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்குத் தனியாக 5 சதவீதம், மாற்றுத் திறனாளிகளுக்கு 2 சதவீதம் என இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்றார்.
அவரது அந்தக் கருத்தை நேரலையில் கேட்டபோது, சட்டென நினைவுக்கு வந்தவர் கல்விச் செயற்பாட்டாளர் பிரபா கல்விமணி. இந்தக் கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்திவருபவர் அவர். அவரிடம் இதுகுறித்துப் பேசினோம்.
“அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு, நீதியரசர் கலையரசன் குழு அறிக்கையின் அடிப்படையில்தான் கொடுக்கப்பட்டது. மிக முக்கியமான அறிக்கை அது. தமிழக வரலாற்றிலேயே பெற்றோரின் வருமானத்துக்கும், பிள்ளைகள் படிக்கிற பள்ளிகளுக்குமான தொடர்பை வெளிக்கொண்டுவந்த முதல் அரசு ஆவணம் அதுதான். ‘அரசுப் பள்ளியில் மாத வருமானம் ரூ.4 ஆயிரத்துக்குள் உள்ளவர்களின் பிள்ளைகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாத வருமானம் ரூ.5,600-க்குள் உள்ளவர்களின் பிள்ளைகளும்தான் படிக்கிறார்கள்’ என்கிறது அந்த அறிக்கை. அதேபோல, மாத வருமானம் ரூ.10,500 வரையில் உள்ளவர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளிலும், ரூ.12,600 வரை உள்ளவர்களின் பிள்ளைகள் மெட்ரிக் பள்ளியிலும், ரூ.40 ஆயிரம் வரை உள்ளவர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியிலும், அதற்கு மேல் வருமானம் உள்ள பணக்காரர்களின் பிள்ளைகள் ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் படிக்கிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை.
அதுமட்டுமல்ல, எந்தெந்தப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் எத்தனை சதவீத இடம் கிடைக்கிறது என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதன்படி பணக்காரப் பிள்ளைகளே மருத்துவப் படிப்பில் அதிகம் சேருகிறார்கள் என்பதும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு 1 சதவீத வாய்ப்புக் கூட கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீதமாவது உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது அந்தக்குழு. ஆனால், 7.5 சதவீத ஒதுக்கீட்டை மட்டும்தான் கொடுத்தது அதிமுக அரசு. இருந்தாலும், ஒரு குழு அமைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு கொடுத்த செயல் பாராட்டுக்குரியது.
திமுக ஆட்சியமைந்ததும், அந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்புக்கு மட்டுமின்றி அனைத்து தொழிற்கல்விக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அதுவும் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், உள்ஒதுக்கீடு நல்ல பலன்கொடுப்பது தெரியவந்திருப்பதால், அதை உயர்த்தியிருக்க வேண்டும் இந்த அரசு. கலையரசன் கமிட்டி அறிக்கையின்படி, பிளஸ் 2 தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் அரசுப் பள்ளியில் படித்தவர்கள் 41 சதவீதம், அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தோர் 26 சதவீதம், மெட்ரிக் பள்ளியில் படித்தோர் 26 சதவீதம், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் படித்தோர் 4 சதவீதம், சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்தோர் 4 சதவீதம், ஐசிஎஸ்இ பள்ளிகளில் படித்தோர் 0.2 சதவீதம், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் படித்தோர் 0.2 சதவீதம். மருத்துவ சீட் எண்ணிக்கையை அனைத்து வர்க்கத்துக்கும் சமமாகப் பங்கிடுவதுதான் உண்மையான சமூகநீதி. அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை குறைந்தபட்சம் 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதாவது அவர்களது மொத்த சதவீதத்தில் பாதியாவது ஒதுக்க வேண்டும்.
இதேபோல அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அவசியம். காரணம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ஓர் ஊரில் அரசு உதவிபெறும் பள்ளி இருந்தால், அந்த ஊரில் அரசுப் பள்ளி தொடங்கப்படாது என்பதை அரசு ஒரு கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறது. இதனால், நிறைய கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஊரில் அரசுப் பள்ளி இல்லாததற்கு, பாவம் அவர்கள் என்ன செய்ய முடியும்? ஏழைகள் ஏழைகள் தானே? எனவே, அரசு உதவிபெறும் பள்ளிக்கு 12 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். நீட்டால் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று திமுகவும், அதிமுகவும் மனப்பூர்வமாகப் பேசுவது உண்மையென்றால், இதைச் செய்தே ஆகவேண்டும்.
இதேபோல மெட்ரிக், சிபிஎஸ்இ, மாணவர்களுக்குத் தேவையெனில் அவர்களது சதவீதத்துக்கு ஏற்ப 12 சதவீதம், 2 சதவீதம் என்று ஒதுக்கீடு தரலாம். அப்போதுதான் சம வசதியுள்ள பிள்ளைகள் இடையே சமமான போட்டி நடக்கும். கல்வித்தரமும் உயரும். இல்லையென்றால், வழக்கம்போல தகுதியே இல்லாவிட்டாலும் பணக்காரப் பிள்ளைகள் மட்டும்தான் பயன்பெறுவார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். வைக்கவில்லை. அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களாவது தங்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒதுக்கீடு கேட்டிருக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன் கேட்டவர்கள் இப்போது அமைதியாக இருக்கிறார்கள். இந்த அக்கறை இன்மைக்குக் காரணம், இவர்கள் இருதரப்பினரும் தாங்கள் பெற்ற பிள்ளைகளை தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளிலும், ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் படிக்கவைத்திருக்கிறார்கள் என்பதுதான். இத்தனை அரசியல் கட்சிகள் சட்டமன்றத்தில் இருந்தும்கூட, அரசு, அரசு உதவிபெறும் மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு பற்றிப் பேசாததற்குக் காரணம், அதில் பலர் கல்வி நிறுவனங்களை நடத்துகிற, கல்விக்கொள்ளையர்களாக இருப்பதுதான். இப்படி பணக்காரர்களுக்கான அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஏழைக் குழந்தைகளின் நிலையைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காகச் சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பிய பூவை ஜெகன்மூர்த்தி எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும் சரி, அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார் பிரபா கல்வி மணி.
இதுபற்றி பூவை ஜெகன்மூர்த்தியிடம் கேட்டபோது, “நீட் தேர்வு வேண்டாம் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கோரிக்கைவைத்தாலும், விலக்கு கொடுக்கவே கூடாது என்பதில் பாஜக அரசு உறுதியாக இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாம் மறுபடியும் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள நீட் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்துத்தான் ஆகவேண்டும் என்றாலும், உடனடியாக அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வாரா? என்று தெரியவில்லை. அதற்குள் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுவிடும். மறுபடியும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்கொலைகள் நிகழும். எனவேதான், தமிழ்நாடு அரசு தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உள்ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தினால், எந்த நீட் வந்தாலும் சரி ஏழை எளிய பிள்ளைகளோ, கிராமப்புற பிள்ளைகளோ பாதிக்கப்பட மாட்டார்கள்" என்றார்.
“நீட் தேர்வு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கிறது” என்பது அதை எதிர்ப்பவர்களின் வாதம். “இல்லை இல்லை... நீட் தேர்வு வந்த பிறகுதான் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்பது பாஜகவின் வாதம். உண்மை என்னவென்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியிடம் கேட்டபோது, “இந்த இரண்டு கூற்றிலுமே அரை உண்மைதான் இருக்கிறது. நீட் தேர்வு வருவதற்கு முன்பே, ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு மிகமிகக் குறைவாகத்தான் இருந்தது. நீட் தேர்வு வந்த பின்னர் அந்த வாய்ப்பு மேலும் குறைந்ததே தவிர, கூடவில்லை. நீட் தேர்வு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் 2015-ல் 36 அரசுப் பள்ளி மாணவர்களும், 2016-ல் 37 மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு நடைமுறைக்குவந்த பிறகு, 2017-ல் 3, 2018-ல் 5, 2019-ல் 6 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். 7.5 சதவீத இட ஒதுக்கீடு வந்த பிறகுதான், அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 400 பேருக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், நீட் தேர்வால்தான் ஏழை எளிய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததாக சிலர் வாய்க்கூசாமல் பொய் பேசுகிறார்கள்.
இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். பிளஸ் 2 தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் முன்பு, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பணத்தைக் கொடுத்து சீட் வாங்கிவிட்டார்கள். நீட் தேர்வு வந்த பிறகு அந்த நடைமுறை தகர்க்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். இது நீட் தேர்வின் சாதனையல்ல, சிஸ்டத்தின் சாதனை. அதாவது, சுயநிதி கல்லூரியிலும் மெரிட் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற விதியை ஏற்படுத்திவிட்டாலே, இதைச் சரிசெய்துவிட முடியும். அதைவிட்டுவிட்டு மாணவர்களை தேர்வுக்கு மேல் தேர்வு எழுதச் சொல்வது பொறுப்பற்ற செயல்” என்றார்.
ஆக, தமிழ்நாடு அரசு உடனே செய்ய வேண்டியது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயர்த்துவதும், அரசு உதவிபெறும் மாணவர்களுக்கென தனியாக 12 சதவீதம் உள்ஒதுக்கீட்டை ஏற்படுத்துவதும்தான். கூடவே, இம்மாணவர்களுக்கு வட்டாரந்தோறும் இலவச நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கி, சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டியதும் அரசின் கடமை.
வீரியத்தைவிட காரியமே பெரிது என்பதை இந்த விஷயத்திலும் கவனத்தில் கொள்ளுமா திமுக அரசு!