ஆசிரியர்களின் தற்போதைய நிலையையும், ஆசிரியர் சங்கங்களின் நிகழ்கால நடப்புகளையும் சுட்டிக்காட்டும் வகையில், தனது வலைதள பக்கத்தில் ‘ஆசிரியர்கள் எங்கே தோற்றுப் போகின்றனர்?’ என்ற தலைப்பில் நீண்டபதிவு ஒன்றை எழுத்தாளரும், ஆசிரியருமான ‘சிகரம்’ சதீஷ்குமார் பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பதிவு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களாலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்படுகிறது. அவரின் அந்தப் பதிவு...
ஆசிரியர்கள் எங்கே தோற்றுப் போகின்றனர்
ஓர் ஆசிரியருக்கு பிரச்சினை என்று வரும்பொழுது, அவர் தொடக்கப் பள்ளியா, ஆரம்பப் பள்ளியா, கூட்டணியா, மன்றமா எனப் பார்த்துப் பிரிந்து நிற்கும்பொழுது, ஆசிரியர்கள் தோற்றுப் போகின்றனர்.
ஆசிரியர் இனத்துக்கு ஒரு பிரச்சினை என்னும் பொழுது, இடைநிலை ஆசிரியருக்கா, பட்டதாரி ஆசிரியருக்கா, முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கா எனப் பாகுபாடு பார்க்கும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.
ஓர் ஆசிரியர் தவறு செய்தால், அவரைக் கண்டிப்பதையோ, தண்டிப்பதையோ தடுக்க சங்கம் என்ற போர்வையில் ஒரு சங்கம் முன்னே வரும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.
தவறே செய்யாத ஆசிரியர்கள் பாதிக்கப்படும்பொழுது, நமக்கேன் வம்பு என பிற ஆசிரியர்கள் ஒதுங்கி நிற்கும்பொழுது தோற்றுப் போகின்றனர்.
ஏதோ ஒரு சங்கத்தில் இணைந்துவிட்டால், அவர்கள் தவறு செய்யும்பொழுதும் குரல் எழுப்பாமல் எப்போது அமைதியாய் இருக்கத் தொடங்கினார்களோ, அன்றே ஆசிரியர்கள் தோற்கத் தொடங்கிவிட்டனர்.
ஏதோ ஒரு மூலையில் புயலோ, பூகம்பமோ என்றால் துடிக்கும் ஆசிரியர்கள், ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியருக்குப் பிரச்சினை என்றால் மட்டும் அமைதியாக இருக்கும்போது தோற்கத் தொடங்குகின்றனர்.
கல்வி முறையிலோ, கற்பித்தல் முறையிலோ ஒரு மாற்றம் வரும்பொழுது அது சரியா, தவறா என விவாதிக்காமல் அனைத்துக்கும் தலையாட்டும்போது ஆசிரியர்கள் தோற்றுப் போகின்றனர்.
சக ஆசிரியரின் திறமையைப் பாராட்ட மனமின்றி புறம்கூறத் தொடங்கும்போது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.
எல்கேஜி, யுகேஜிக்கு பல்லாயிரம் ஆசிரியர்களை தரம் இறக்கியபோது, லட்சம் ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்தபோதே தோற்கத் தொடங்கினர்.
ஒரே பணிநிலையில் வேலை பார்க்கும் சக ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைத்துக் கொடுக்கும்போது, உரத்தக் குரல் கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபோதே தோற்கத் தொடங்கினர்.
ஆசிரியர்கள் தங்களுடைய அளப்பரிய பணிக்கான பாராட்டு மேடைகளிலும், ஊடகங்களிலுமே என நம்பி, எப்பொழுது அவற்றைத் தேடத் தொடங்கினார்களோ, அன்றே தோற்கவும் தொடங்கிவிட்டனர்.
கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை உணராமல் அங்கன்வாடிகளை தொடக்க நிலையும், தொடக்க நிலையை உயர்நிலையும், உயர்நிலையை மேல்நிலையும் மாற்றி,மாற்றி குறை சொல்லத் தொடங்கும்போதே தோற்கவும் தொடங்கிவிட்டனர்.
ஊதியத்தை வைத்து, பதவியை வைத்து என்றைக்கு ஆசிரியர்கள் தங்களைத் தரம்பிரித்துப் பழகத் தொடங்கினார்களோ, அன்றே தோற்கத் தொடங்கிவிட்டனர்.
மாணவர்களிடம் குடிக்காதே எனச் சொல்லும் ஆசிரியர்கள், அரசிடம் ஏன் சாராயக் கடைகள் எனக் கேட்க முடியவில்லை! சுற்றுச்சூழல் காப்போம் எனக் கற்றுத்தரும் ஆசிரியர்கள் அரசிடம் ஏன் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் எனக் கேட்க முடியவில்லை.
தவறு எனத் தெரிந்தும், நமக்கேன் வம்பு எனஆசிரியர்கள் ஒதுங்கத் தொடங்கிய நாட்களிலேயே ஆசிரியர்களைத் தோல்விகளும் துரத்தத் தொடங்கி விட்டன.
உண்மை என்னவெனில், தோல்வி என்பதே இல்லை, எல்லாம் தற்காலிகப் பின்னடைவுதான்.. தற்காலிகம் நிரந்தரமானால் அதுதான் தோல்வி!
-‘சிகரம் ’சதிஷ் (எழுத்தாளர்- ஆசிரியர்)