சென்னை: கிராமிய இசை, மற்றும் வில்லுப்பாட்டு தொடர்பான டிப்ளமோ படிப்பில் சேர பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு இசை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு இசை பல்கலைக்கழகம் கிராமிய இசை மற்றும் வில்லுப்பாட்டு தொடர்பான ஓராண்டு கால டிப்ளமோ படிப்பை ரெகுலர் முறையில் வழங்குகிறது. இதில், பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். நாட்டுப்புற கலை மற்றும் வில்லுப் பாட்டு பற்றிய பொது அறிவு அவசியம். மேலும், தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு ஏதும் கிடையாது. இந்த டிப்ளமோ படிப்பு 2 செமஸ்டர்களை உள்ளடக்கியது. ஒரு செமஸ்டருக்கான கல்விக் கட்டணம் ரூ.7,500. தகுதியுடையவர் https://forms.gle/H7KrELdvGq6pMuSC8 என்ற இணைப்பை பயன்படுத்தி ஜுன் மாதம் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும்.
இப்படிப்பின் மூலம் நாட்டுப்புற இசையின் பல்வேறு பரிணாமங்களை அறிந்துகொள்ளலாம். வில்லுப்பாட்டு கலையில் பாடுதல், விவரித்தல், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் வில்லுப்பாட்டு கலைகளுக்கான இசைக் கருவிகள் கற்றல் ஆகியவை பாடத்திட்டத்தில் இடம்பெறும். சிறந்த வல்லுநர்கள் வகுப்புகளை நடத்துவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
» மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள், கையேடு விநியோகம்
» முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்