மருத்துவக் கனவை நனவாக்கும் மகளிர் மேல்நிலைப் பள்ளி!

By கரு.முத்து

நடப்பாண்டு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 34 இடங்களைப் பெற்றிருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம். இதன் மூலம், மாநிலத்தில் அதிக இடங்களைப் பெற்ற மாவட்டங்களில் 2-வது இடம் புதுகைக்குக் கிடைத்திருக்கிறது. முதல் இடத்தை சேலம் மாவட்டமும், 3-வது இடத்தை தர்மபுரி மாவட்டமும் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் சீட்டும், ஒரு மாணவிக்குப் பல் மருத்துவ சீட்டும் கிடைத்துள்ளன. ஒரே பள்ளியிலிருந்து 7 பேர் மருத்துவக் கல்வி பயிலச் சென்றிருப்பது, புதுகை மாவட்டத்தையே பூரிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

கீரமங்கலம் பள்ளி

வழிவகுத்த உள் இடஒதுக்கீடு

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஜனவரி 24-ம் தேதி வெளியிடப்பட்டது. ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 544 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டும், 24 மருத்துவம் மற்றும் 10 பல் மருத்துவம் என மொத்தம் 34 அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ சீட்களைப் பெற்றுள்ளனர். அதில்தான் கீரமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தனித்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தப் பள்ளியின் சீரிய செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு இந்தச் செய்தி அதிக ஆச்சரியம் தராது என்றே சொல்லலாம்!

எம்.பி.பி.எஸ் படிக்க தேர்வான மாணவிகள்

அசத்தும் அரசுப் பள்ளி

10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானால், கீரமங்கமலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எந்த இடம் என்றுதான் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஆவலுடன் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் தொடர்ந்து அதிக மதிப்பெண்களைப் பெற்றுவருகிறார்கள். 1996-ல் மேல்நிலைப் பள்ளியாக உருவெடுத்த இப்பள்ளி, 2005-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுவருகிறது. மாணவிகள் யாரும் தேர்வு எழுதாமல் போனால்தான் உண்டு. மற்றபடி எல்லா மாணவிகளுமே தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறுவது, பெரும்பாலும் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள்தான். நீட் தேர்வு அறிமுகமாவதற்கு முன்பும்கூட, இப்பள்ளியைச் சேர்ந்த பல மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற்று மருத்துவம் படித்திருக்கிறார்கள்.

இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்வியுடன் பள்ளியின் தலைமையாசிரியர் கோவிந்தராஜுடன் பேசினேன். ’’எங்கள் பள்ளியின் மாணவிகள் தொடங்கி ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்மக்கள், அதிகாரிகள் என அத்தனை பேரின் ஒத்துழைப்போடுதான் இது சாத்தியமாயிற்று” என்று தன்னடக்கத்துடன் பேசத் தொடங்கினார் கோவிந்தராஜ்.

“அனைவருமே தத்தம் பொறுப்புகளைச் செவ்வனே உணர்ந்து செயல்பட்டு இத்தகைய சாதனையைச் செய்திருக்கிறார்கள். எங்கள் பள்ளியிலிருந்து கடந்த ஆண்டு 4 மாணவிகள் மருத்துவம் படிக்கத் தேர்வானார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 7 பேர் தேர்வாகியிருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ்

எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவி நா.தீபிகா, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ச.வாலண்டினா தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மு கனிகா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜெ. சுவாதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ர.யமுனா திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியிலும், ப. நிஷாலினி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியிலும் மருத்துவம் படிக்கத் தேர்வாகியுள்ளனர். மேலும் த.நிஷா என்ற மாணவி திருநெல்வேலி ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவம் படிக்கப் போகிறார். இது எங்கள் அனைவருக்குமே அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார் கோவிந்தராஜ்.

கூட்டு முயற்சி, கூடுதல் அக்கறை

பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் என்று அத்தனை பேரின் கூட்டுமுயற்சியும்தான் இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. காலை 9.30-க்குத்தான் பள்ளி தொடங்கும் என்றாலும் 8.30 மணிக்கே சிறப்பு வகுப்புகள் தொடங்கிவிடுகின்றன. அதேபோல மாலை 4.30 மணிக்குப் பள்ளி முடிந்துவிட்டாலும் கூட சிறப்பு வகுப்புகள் 5.30 மணி வரை தொடர்கின்றன. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் இதனால் பயன்பெறுகின்றனர்.

மாணவிகளின் பாதுகாப்பு குறித்த அக்கறையும் கண்காணிப்பும் இத்தகைய வெற்றிக்குத் துணைபுரிந்திருக்கின்றன. சிறப்பு வகுப்புகளுக்கு வரும்போதும், போகும்போதும் மாணவிகளை ஆசிரியர்கள் அக்கறையுடன் கண்காணிக்கிறார்கள். யாராவது இடையூறு செய்வதாகத் தெரிந்தால், அது பெற்றோர் - ஆசிரியர்கள் சங்கம் மூலமாக ஊர்க்காரர்களிடம் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அழைத்து கண்டிக்கப்படுகிறார்கள். அதனால் மாணவிகளுக்குத் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுவதில்லை.

காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் முடிந்தபோதெல்லாம் மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்படுகிறார்கள். மாணவிகளின் மதிப்பெண் குறித்து அவர்களிடம் நேரடியாக விளக்கப்படுகிறது. வீட்டுச் சூழ்நிலை குறித்து மாணவிகளிடம் முன்பே கேட்டு தகவல்களைப் பெற்று அதுகுறித்து பெற்றோரிடம் கலந்தாலோசிக்கப்படுகிறது.

வீடுதேடி வரும் ஆசிரியர் குழு

தனிப்பட்ட அக்கறையுடன் இதை அணுகுகிறார்கள் இப்பள்ளியின் ஆசிரியர்கள். ஒவ்வொருநாளும் ஒரு சில ஊர்களைத் தேர்ந்தெடுத்து அங்கு நேரில் செல்கிறார்கள். மாலை நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வீடுகள், மூழ்கிக் கிடக்கும் வேளையில் மாணவிகளின் வீட்டுக்குப் போகும் ஆசிரியர் குழுவினர், ஒவ்வொரு மாணவியும் கவனம் சிதறாமல் பாடத்தைப் படிக்கிறாரா என்பதை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்கிறார்கள். மாணவிகளின் கவனத்தைத் திசைதிருப்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு எடுத்துச்சொல்கிறார்கள். குறைந்தது ஒரு ஆசிரியையாவது இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் ஆசிரியர் குழு வரும் என்ற நினைப்பு இருப்பதால், மாணவிகளின் கவனம் படிப்பிலேயே நீடிக்கிறது.

இப்பள்ளியில் இப்படி கூடுதல் அக்கறை செலுத்தப்படுவதன் காரணம் குறித்த தகவல்களை, நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இப்பள்ளியின் வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் கொடியரசன்.

‘’முன்பெல்லாம் ஆசிரியர் பயிற்சி முடித்தால் அந்த ஆண்டே வேலை கிடைத்துவிடும் என்ற நிலை இருந்தது. இந்தப் பகுதி பெரும்பாலும் ஏழை மக்கள் வாழும் பகுதி என்பதால், அவர்களின் வீட்டுப் பிள்ளைகளை ஆசிரியராக்கிவிட்டால் அவர்களின் ஏழ்மை மாறிவிடும் என்று நினைத்து நாங்கள் மாணவிகளை அதற்காகத் தயார் செய்ய அக்கறை காட்ட ஆரம்பித்தோம். ஒவ்வொரு ஆண்டும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் பயிற்சிக்குத் தேர்வாகிவிடுவார்கள்.

ஆசிரியர் கொடியரசன்

அந்த முனைப்பு அப்படியே நீடித்து, தற்போது மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது என்ற இடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மருத்துவம் மட்டுமில்லாமல் வேளாண்மை, பொறியியல் என்று அனைத்துப் படிப்புகளுக்குமே எங்கள் பள்ளி மாணவிகள் செல்வது அதிகரித்துள்ளது” என்கிறார் கொடியரசன்.

மாணவிகளுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதிலும் இப்பள்ளி சிறப்புக் கவனம் செலுத்துகிறது. கடந்த ஆண்டுகளில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகளில் சேர்ந்தவர்களை அழைத்துவந்து, மாணவிகள் மத்தியில் பேசவைத்து மாணவிகளுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு, மிகப் பிரம்மாண்டமான முறையில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. முன்னாள் மாணவிகள், பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர்களால் அளிக்கப்படும் பரிசுப்பொருட்களை ஒரு ‘குட்டியானை’ வாகனம் பிடித்துத்தான் ஏற்றிச் செல்வார்கள் முதலிடம் பிடித்தவர்கள். வெற்றியாளர்களுக்குத் தங்கக்காசுகள் வரையிலும் பரிசாகக் கிடைக்கும். இதைப் பார்க்கும் மாணவிகள் தாங்களும் இப்படிப் பரிசுகளை வெல்ல வேண்டும் என்று ஆர்வத்துடன் படிக்க ஆரம்பிப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல் வேறு பள்ளிகளில் சிறப்பாகப் பாடம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து வந்து, இந்தப் பள்ளியில் பாடம் நடத்த வைக்கிறார்கள். காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்குப் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தின் மூலமாக 5,000 ரூபாய் சம்பளத்தில் தகுதியான பட்டதாரிகளை அழைத்து வந்து பாடம் நடத்தச்செய்து, ஆசிரியர் இல்லாத குறையைப் போக்கிவிடுகிறார்கள்.

பெருமைக்குரிய அடையாளம்

இத்தகைய சிறப்புகளால் ஊரின் பெருமைக்குரிய அடையாளமாக மாறிப் போயிருக்கிறது இந்தப் பள்ளி. இங்கு வேலை பார்ப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள் ஆசிரியர்கள். இங்கு படிப்பதை பாக்கியமாகக் கருதுகிறார்கள் மாணவிகள். சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் மாணவிகள் தேடிவந்து இந்தப் பள்ளியில் பயில்கிறார்கள் என்பதே, இந்தப் பள்ளிக்கான மிகச்சிறந்த சான்று.

அண்மையில் இப்பள்ளிக்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, ஆசிரியர்களையும் மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவிகளையும் பாராட்டினார். பள்ளிக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

இன்னும் வசதிகள் மேம்படுத்தப்பட்டால் மேன்மேலும் இப்பள்ளி மிளிரும் என்பது உறுதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE