இரண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களில் ‘இந்து பாடக் கல்வி’ அறிமுகம்

By ஆர். ஷபிமுன்னா

இந்தியாவின் இரண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களில் ‘இந்து பாடக் கல்வி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எம்.ஏ எனும் முதுகலைப் பட்டப்படிப்பான இதில், 46 மாணவர்கள் இணைந்துள்ளனர்.

இதை, உத்தரப் பிரதேசத்தின் பழம்பெரும் கல்வி நிறுவனமான இந்து பனாரஸ் பல்கலைகழகம் மற்றும் டெல்லியின் ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரி தேசிய சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகம் ஆகியவை நடப்புக் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்துள்ளனர்.

இவற்றில் இணைந்து பயிலவேண்டி மொத்தம் 46 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்து பாடக் கல்விக்கானப் பட்டமேற்படிப்பு, டெல்லியின் ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகத் தெரிகிறது.

இதே பாடக் கல்வி, குஜராத்தின் மத்தியப் பல்கலைக்கழகத்திலும் அறிமுகமாக உள்ளது. இந்து பாடக் கல்வியின் மூலம் சம்ஸ்கிருத சாஸ்திரங்கள் மற்றும் இந்து மதத்தின் மீதுள்ள தவறானப் புரிதல்கள் சரிசெய்யப்பட உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த பாடக் கல்வியின் மூலம், ஜெயினிசம் மற்றும் புத்திசம் ஆகிய இரண்டும் இந்து மதத்தின் கிளைகள் என சித்தரிக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது. இதில், சம்ஸ்கிருதம் கற்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த முதுநிலை பட்டத்துக்காக 16 வகையானப் பாடப் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 9 கட்டாயப் பாடங்களாகவும், 7 விருப்பத்தின் பேரிலும் பயிலலாம்.

இதில் சேர்ந்து பயில, அனைத்து பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கும் அனுமதி உண்டு. இந்த புதிய முதுநிலைப் பாடக்கல்வியின் மூலம், இந்து மதத்தில் சீர்திருத்தங்கள் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE