மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு: தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் சேகரிப்பு

By சி.பிரதாப்

சென்னை: மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வகையில் தலைமை ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: "நிகழ் கல்வியாண்டுக்கான (2024 - 25) மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக தகுதியான அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலின்படி பெயர்ப் பட்டியல் இந்த சுற்றறிக்கையுடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து ஜூன் 21-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு நேரில் தனி நபர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து பின் வரும் சில அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.

பெயர்ப் பட்டியலில் தகுதியுள்ள தலைமை ஆசிரியர் பெயர் ஏதும் விடுபட்டிருப்பின் அவர் பணி வரன்முறை செய்யப்பட்ட ஆணையின் நகலினை இணைத்து முதன்மைக் கல்வி அலுவலரின் விரிவான குறிப்புரையடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்களிடம் விருப்பப் படிவத்தில் பதவி உயர்வு, பணி மாறுதலுக்கு விருப்பம் அல்லது விருப்பமின்மை பெற்று பணிப் பதிவேட்டில் பதிவு செய்து அதன் சான்றொப்பமிட்ட நகல், அசல் விருப்ப உரிமை படிவம் ஆகியவை அனுப்பப்பட வேண்டும். மேலும், கடந்த ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலரின் பதவி உயர்வு, பணியிட மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்திருந்தால் மீண்டும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடமிருந்து புதிதாக விருப்ப உரிமை பெற்று அளிக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

சார்ந்த தலைமை ஆசிரியரின் பணிப் பதிவேட்டினை ஆய்வு செய்து பரிந்துரை செய்யப்பட வேண்டும். பின்வரும் காலங்களில் புகார் ஏதும் பெறப்பட்டால் பரிந்துரை செய்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரே இதற்கு பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE