கலைஞர் நூலகக் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்?

By கே.எஸ்.கிருத்திக்

மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட உள்ளதாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் 97-வது பிறந்த நாளான 3.6.2021 அன்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மதுரை நத்தம் சாலையில் பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகப் பகுதியில் 2.70 ஏக்கரில் கட்டப்படும் இந்த நூலகமானது, மொத்தம் 7 தளங்களைக் கொண்டது. அடித்தளமானது 21,251 சதுர அடியும், தரைத்தளமானது 32,656 சதுர அடியும், முதல், இரண்டாம், மூன்றாம் தளங்கள் தலா 29,655 சதுர அடியும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் தளங்கள் தலா 20,616 சதுரடியும் கொண்டவையாக இந்தக் கட்டிடம் கட்டப்பட உள்ளது. ஆக மொத்தம் இந்தக் கட்டிடம் 20,04,720 சதுர அடி பரப்பு கொண்டதாக இருக்கும். இது ரூ.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. புத்தகங்கள் வாங்க ரூ.10 கோடியும், கணினி உபகரணங்களுக்கு ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அடிக்கல் நாட்டிய மறுகணமே, அஸ்திவாரம் தோண்டும் பணிகள் தொடங்கிவிட்டன. 12 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டபடி பணிகள் நடந்தால், அடுத்தப் பொங்கல் விழாவில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டுவிடும் என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE