நீட் தேர்விலிருந்து விலக்குபெற சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பது என, தமிழக சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் காலம் கடத்துவதை அடுத்து, இதுகுறித்து ஆலோசிக்க தமிழக சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் அதிமுக, பாஜக உட்பட தமிழக சட்டப்பேரவையில் இடம் பெற்றிருக்கும் 13 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. ஆனால், நீட் தேர்வு விலக்கு மசோதாவில் பாஜகவுக்கு உடன்பாடில்லை என்று பாஜக சார்பில் பங்கேற்ற வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் பங்கேற்ற ஏனைய கட்சிகள் நீட் விலக்கு பெற சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருமனதாக தீர்மானித்துள்ளன.
அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து தமிழக மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: "நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது. நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளை பெறுவதற்கு வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டுமே அது சாதகமானது. மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக ஆக்குகிறது.
நீட் தேர்வு மாணவர்களின் கல்வி விஷயத்தில் கூட்டாட்சித் தத்துவத்தை குலைப்பதாக அமைந்துள்ளது. ஆகவே, மனித உரிமைகளை நிலைநாட்டவும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றவும் தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்ப பட்டது. ஆனால், இந்த சட்ட முன்வடிவை மாநில ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றதல்ல.
தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி ஆளுநரை தமிழக முதல்வர் சந்தித்து, நீட் மசோதாவை குடியசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க முயன்றும் அவரை சந்திக்க இயலவில்லை. அதனால், அவரது அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து மேலும் வலியுறுத்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க முயன்றபோது அவர் சந்திக்க மறுத்து விட்டதால், அவரது அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் மறுத்தது, மக்களாட்சி மாண்புக்கு எதிரானது என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார்
அதையடுத்து இன்றைக்கு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
ஒன்றிய உள்துறை அமைச்சரை அனைத்துக் கட்சிகளின் சார்பில் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஏழை கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்ற, மாநில சுயாட்சி தத்துவத்தைக் காப்பாற்ற, நீட்தேர்வை முழுமையாக நீக்கிட மூத்த சட்டவல்லுநர்களை கலந்து ஆலோசித்து சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பது என சட்டப்பேரவையில் உள்ள பாஜக தவிர்த்த மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மனதாக தீர்மானித்துள்ளன. மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வு பாதிப்புகளை மற்ற மாநிலங்களும் உணரும் வகையில், ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது" என அமைச்சர் தெரிவித்தார்.