திரும்பிப் பார்க்க வைக்கும் திலீபன் எஸ்.ஐ!

By என்.சுவாமிநாதன்

அருமனை காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக இருக்கும் திலீபனுக்கு, குமரி மாவட்டத்தில் அறிமுகமே தேவை இல்லை. மணல் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணிசெய்தபோது தன் நேர்மையான நடவடிக்கைகளால், மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இப்போது கிராமப்புற இளைஞர்களுக்கு காவல் துறை மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தனது தந்தை நீலத்தங்கத்தோடு சேர்ந்து இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார் திலீபன். இவரிடம் பயின்ற மாணவர்களில் 21 பேர், அண்மையில் அரசுப் பணியில் சேர்ந்திருக்கிறார்கள்.

பயிற்சி வகுப்பில் திலீபன்...

குமரி மாவட்டம், சொத்தவிளை கிராமத்தில் இருக்கிறது திலீபனின் வீடு. இவரது தந்தை நீலத்தங்கமும் காவல் துறையில் சிறப்புச் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்தான். இவர்கள் வீட்டு மொட்டைமாடியில் இலவசப் பயிற்சி வகுப்புக்கென பிரத்யேகமாக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. நாம் சென்றிருந்த நேரத்தில், 50-க்கும் அதிகமான மாணவ - மாணவியருக்கு பயிற்சி வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் திலீபன். காலை மாலை என தினமும் 2 வேளையும் இந்த வகுப்பை எடுக்கிறார் இவர்.

“இது முழுக்க கிராமப் பகுதி. இங்கே இருக்கும் பலருக்கும் போட்டித் தேர்வுகள் பற்றிய விவரங்கள் அவ்வளவாய் தெரியாது. பொறியியல் படித்திருப்பார்கள். ஆனால், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் கூலி வேலைக்குச் செல்வார்கள். வறுமையின் காரணமாக, வேலைசெய்து படிக்க வேண்டிய நெருக்கடியும் அவர்களுக்கு இருக்கும். அவர்களுக்காகத்தான் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள்” என்கிறார் திலீபன்.

2021-ம் ஆண்டின் டாப்பர்ஸ்..

இவரிடம் பயிற்சிபெற்ற 13 பேர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலும், 5 பேர் ஆயுதப்படையிலும், 3 பேர் தீயணைப்புத் துறையிலும் அண்மையில் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டு, இந்த வாரம் இவர் தொடங்கியிருக்கும் அடுத்த வகுப்பில் ஏராளமானோர் சேர்ந்திருக்கிறார்கள்.

“இந்தப் பயிற்சி மையத்தை அமைக்கும் யோசனை எப்படி வந்தது?” திலீபனிடம் கேட்டோம்.

“1985-ல், எங்க அப்பாவுக்கு போலீஸ் வேலை கிடைத்தது. அதற்குப் பின்னால் எங்கள் ஊரிலிருந்து அரசு வேலைக்குப் போனது நான் தான். 2011-ல் காவல் துறையில் சேர்ந்தேன். 360 குடும்பங்கள் இருக்கும் இந்தக் கிராமத்திலிருந்து ஒரு அரசுப் பணியாளர் உருவாக 26 வருடங்கள் ஆகியிருக்கு. எனக்குப் பின்னால் என் தம்பி திவாகரன் வங்கியில் வேலை கிடைத்து அதிகாரியானார். இதற்கு இடையில் இங்கே யாரும் படிக்கவில்லையா என்றால் பொறியியல் பட்டதாரிகள் பலர் உருவாகியிருக்கிறார்கள். ஆனால், போட்டித் தேர்வுகள் குறித்து அவர்களுக்கு சரிவரத் தெரியவில்லை.

இதனால், கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி இருந்தவர்களை அரசுப் பணியில் அமர்த்துவதையே லட்சியமாகக்கொண்டு, இந்த மையத்தைத் தொடங்கினோம். முதலில் சீருடைப்பணியாளர் தேர்வுக்கு மட்டுமே பயிற்சி கொடுத்தோம். இந்த ஆண்டில் இருந்து வங்கித் தேர்வுக்கும் இலவசப் பயிற்சி கொடுக்கிறோம்” என்று சொன்னார் திலீபன்.

நீலத்தங்கம்

இலவசப் பயிற்சிதான் என்றாலும் தகுதியானவர்களுக்கு மட்டுமே இங்கே இடமளிக்கப்படுகிறது. யாராக இருந்தாலும் நேர்காணல் செய்து. அவர்களின் குடும்ப வறுமை குறித்து முழுமையாக விசாரித்தறிந்த பிறகே, அட்மிஷன் கொடுக்கிறார்கள். இதுபோக, யூடியூப் சேனல் மூலமாகவும் போட்டித் தேர்வர்களுக்கு வகுப்பு எடுக்கிறார் திலீபன்.

குமரி மாவட்டம் மட்டுமல்லாது, சிவகங்கை, மதுரை, சேலம், திருவள்ளூர், வேலூர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இப்போது திலீபனின் பயிற்சிப் பட்டறையில் பயில்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் இலவசமாகத் தங்கிப் படிப்பதற்காக, தனது செலவில் 2 வீடுகளை வாடகைக்குப் பிடித்து வைத்திருக்கிறார் திலீபன்.

இதுபற்றி நம்மிடம் பேசிய நீலத்தங்கம், “ஆரம்பத்தில் சமுதாயக் கூடத்தில்தான் வகுப்பெடுத்தோம். ஆனால் அங்கே விசேஷங்கள் நடக்கும்போது வகுப்பு தடைபட்டது. அதனால்தான் வீட்டுக்கு மேலேயே ஷீட் போட்டோம். சின்ன வயதிலேயே என்னோட அப்பா அம்மா இறந்துட்டாங்க. அதனால் நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்குக் கூட கையில் காசில்லாமல் சொந்தக்காரர் ஒருவரிடம் கடன் வாங்கிச் சென்றேன். இந்த அனுபவம் எல்லாம்தான் கஷ்டப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளை அரசுப் பணி நோக்கி நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது. தருமபுரி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போதே அங்கும் இலவசப் பயிற்சி மையத்தை நடத்தினேன்.

வகுப்பெடுக்கும் திலீபன்

எங்கள் ஊரில் இதைத் தொடங்கியபோதும் வீடு, வீடாகப் போய் படிக்க ஆள் தேடினோம். அதில் 19 பேருக்கு காவல் துறை தேர்வு எழுதுவதற்கான தகுதி இருந்தது. அவர்களை விண்ணப்பிக்க வைத்தோம். எங்கள் ஊருக்காகத் தொடங்கிய இந்தப் பயணத்தில் இப்போது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் பயன்பெறுவது மனதுக்கு நிறைவா இருக்கு” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் குடும்பமே இந்தப் பணிக்கு அர்ப்பணித்துளோம். நான் வரலாறு, அரசியல் பாடம் எடுப்பேன். மூத்த மகன் திலீபன் காவலர் தேர்வுக்கான பாடம் எடுப்பார். மருமகள் ராதிகா பொதுத்தமிழும், பொருளாதாரமும் எடுப்பார். இளைய மகன் திவாகரன் வங்கிப் பணிகளுக்கான தேர்வுக்கு பாடம் நடத்துவார்” என்றார்.

கல்வி சார்ந்த பணிகள் மட்டுமல்லாது, தடகளப் பயிற்சி மையம், கபடி குழுவுக்கான பயிற்சி, உடற் தகுதி அகாடமி ஆகியவற்றையும் திலீபனும் அவரது தந்தையும் நடத்தி வருகிறார்கள்.

இதற்கான செலவுகளுக்கு எல்லாம் என்ன செய்கிறீர்கள் என திலீபனிடம் கேட்டோம். “என் சம்பளம், தம்பியின் சம்பளம், அப்பாவின் பென்சன் இந்த மூன்றிலிருந்தும் ஒரு பகுதியை இந்த மையத்தின் செலவுக்காக ஒதுக்குகிறோம். வெளியிலிருந்து வேறு சில நல்ல உள்ளங்களும் உதவுகிறார்கள். அப்படி உதவுபவர்களில் ஒருவரான விஜயகுமார் கட்டிடவேலை பார்க்கிறார். “என்னால்தான் அரசு வேலைக்குப் போகமுடியவில்லை மற்றவர்களாவது போகட்டும்” என்று சொல்லி, அவர் தன்னாலான உதவிகளைச் செய்கிறார்

இதேபோல் உடற்பயிற்சி செய்யும்போது யாருக்காவது அடிபட்டால், அவர்களுக்கு வைத்தியர் வைகுண்டராஜா காசு வாங்காமலேயே வைத்தியம் பார்த்துவிடுவார். சத்யா, பாஸ்கர், ராமு, நிஷாந்த், சதீஷ், அகிலன், சிறப்புப்படையில் என்னோடு வேலைசெய்த ஜீசஸ் என மொத்தம் 10 பேர் எவ்விதப் பிரதிபலனும் பாராமல் இங்கே பாடம் எடுக்கிறார்கள். ஆக, இது ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி. அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது ஆயிரம் நேர்மையான அரசுப் பணியாளர்களையாவது உருவாக்கிவிட வேண்டும் என்பதுதான் எங்களின் இப்போதைய இலக்கு” என்று சொன்னார் திலீபன்.

திலீபன் குடும்பத்தைப் போல் ஊருக்கு ஒரு குடும்பம் இருந்தால் போதும்; சரியான வாய்ப்புகள் அமையாமல் இருக்கும் அடித்தட்டு இளைஞர்கள் சிகரம் தொடுவது நிச்சயம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE