மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா?

By என்.மாதவன்

”வாருங்கள் வாருங்கள் வயிறு நிறைய சாப்பிடுங்கள். பணம் நீங்கள் செலுத்தவேண்டாம். உங்கள் பேரன் செலுத்துவார்” என்று உணவகத்தின் வாயிலில் எழுதப்பட்டிருந்தது. ஒருவர் மகிழ்வுடன் உள்ளே சென்று வேண்டியமட்டும் சாப்பிட்டார். பின்னர் அவருக்கான கட்டண ரசீது வந்தது. ”இலவசம் என்றுதானே தெரிவித்திருக்கிறீர்கள். இப்போது ரசீது கொடுக்கிறீர்கள்: என வினவினார். ”உங்களுக்கு இலவசம்தான் இது தங்களுடைய தாத்தா சாப்பிட்ட உணவிற்கான ரசீது” என்று ஒருபோடு போட்டாராம். இது ஒரு பழைய கதை.

எதற்கு ஏன் இந்த கதை இப்போது?

இந்த கதை அனுபவம் வேறு எதனையும்விட தற்போது கரோனா கால கற்றல் இடைவெளிக்குப் பொருந்துவதாக உள்ளது. உதாரணமாக இன்றைக்கு இரண்டாம் வகுப்பில் அமர்ந்துள்ள ஒரு குழந்தை கடந்த கல்வியாண்டில் ஒரு நாள் கூட வகுப்பறையில் அமராதவர். அவருக்கு ஒன்றாம் வகுப்பு பாடத்திட்டத்தை நடத்துவதா? இரண்டாம் வகுப்பு பாடத்தை நடத்துவதா? என்ற குழப்பம் வருவது இயல்பானதே. இதுவாவது பரவாயில்லை. குழந்தைகளுக்கான அடிப்படைத் திறன்கள்தான் எப்படியாவது சமாளித்துவிடலாம். உயர்நிலை வகுப்புகளில் பாடம் பயிற்றுவிப்போர் பாடு இன்னும் சிரமமானது.

இதனிடையே தமிழக அரசின் மருத்துவர்கள் சங்கம் மீண்டும் பள்ளிகளை மூடவேண்டும் என்ற அறிவுறுத்தலை அளித்துள்ளது. அவர்களின் கவலையிலும் நியாயமில்லாமல் இல்லை. இதுவரை 18 வயதுக்கு மேல் உடையோருக்கான தடுப்பூசி முகாமே முடியாத நிலையில் இன்னும் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் ஒரு அலை வந்து அதில் பணியாற்ற நேரும்போது ஏற்படப்போகும் சேதங்கள் குறித்த பயம் அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இருக்கவே செய்யவேண்டும். அதுதான் அறிவுடைமை சமூகத்திற்கு அழகு. எனவே கரோனா அபாயம் அளித்திருக்கும் விளம்பர இடைவேளையில்தான் நமது சமூகம் கொஞ்ச நஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் பலர் தனிமனித இடைவெளியின்றி இயங்கி, முகக்கவசம் அணியாமல் சுவாசித்துக்கொண்டிருப்பதும் அபாயகரமானதே.

தற்காலிக ஏற்பாடாய் இல்லம் தேடிக் கல்வி

இவை ஒருபக்கம் இருக்க ஒருவேளை இன்னொரு முறை பள்ளிகள் மூடப்படுமேயானால் என்ன நடக்கும் என்பதையும் யோசிக்காமல் இருக்க இயலவில்லை. கடந்த காலங்களைப் போலவே குறிப்பாகக் கிராமப்புறங்களிலுள்ள ஆரம்ப நடுநிலைப்பள்ளிகள் மூடப்படுமேயானால் கடந்த ஆண்டின் நாட்களைப்போல் கவலைப்படத் தேவையில்லை. கிராம அளவில் குறைந்தபட்ச கற்றல் வாய்ப்புகளை வழங்கும் இல்லம் தேடிக் கல்வித் தொண்டர்கள் உள்ளனர். இந்த சமூக ஏற்பாடு நிச்சயம் குறைந்தபட்சம் கைகொடுக்கும்.

இணையவழிக் கல்வி என்னாச்சு?

கடந்த ஆண்டில்தான் இணையவழி, வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலமாகக் கல்வி அளிக்க இயலவில்லை. குறிப்பாக அரசு பள்ளிகளில் அந்த வாய்ப்புகள் வாய்க்கவில்லை. இந்த முறையாவது அதை செய்யலாமா? வாய்ப்புள்ளதா?

இதில் உலக நாடுகளின் நிலை என்னவென்று எட்டிப்பார்த்தோம். இல்லங்களில் இணையவசதி இல்லாத குழந்தைகள் குறித்து ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் 95 சதவீதம், கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா 88 சதவீதம், தெற்காசியா 88 சதவீதம், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா 75 சதவீதம், லத்தின் அமெரிக்கா மற்றும் கரீபியன் 49 சதவீதம், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா 42 சதவீதம், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் 32 சதவீதம் என்ற விகிதாசாரத்தில் தங்களது இல்லத்தில் இணையவசதியற்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்த அட்டவணையின்படி ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் சுமார் 10-ல் 9 குழந்தைகள் இல்லங்களில் இணைய வசதியில்லாதோர் என அந்த அறிக்கை ஆழமான கவலைகளை வெளிப்படுத்துகிறது. எனவே வசதி வாய்ப்புகளால் வளமாய் வாழ்வோர் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளிலேயே புள்ளிவிவரங்கள் ஆரோக்கியமாக இல்லை என்றெண்ணும்போது ஆசியா நாடுகளின் நிலை குறித்து விவாதிக்கவே எண்ண முடியவில்லை.

வேலை பளு கூடிவிட்டதா?

கரோனா போன்ற பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூகத்தில் பலரும் குழந்தைகளின் கல்வி குறித்துக் கவலைப்படத்தொடங்கியிருப்பது ஆரோக்கியமானது. தமிழ்நாடு இந்த கவலைக்குச் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமானது. அதனை வரவேற்றுச் செயல்படுத்த ஆசிரியர் சமூகத்தோடு அனைவரும் கைகோர்க்கத் தொடங்கியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றே.

ஆசிரியர்களின் வேலை பளு கூடுகிறதா என்றால் நிச்சயம் ஆரம்பக் கட்டத்தில் கூடவே செய்யும். அவ்வாறே பலரும் அல்லல்படுவதைப் பார்க்கவும் இயல்கிறது. ஆனால், இது தற்காலிகமானதே. இது தற்காலிக ஏற்பாடுதான் என்றாலும் சரியான அர்ப்பணிப்பும், ஆர்வமும், ஓரளவு கல்வித் தகுதியும் கொண்ட தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு கல்வித் துறைக்கு உள்ளது.

கல்வித்துறையில் உள்ள அனைத்துவகை அலுவலர்களுமே இதற்காக அல்லும் பகலும் அயராது பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு அங்கமாக தலைமை ஆசிரியர்களும் கொஞ்சம் கூடுதல் சிரமத்தினை அடைவது தவிர்க்க இயலாதது. தலைமை ஆசிரியர்களோடு உதவி ஆசிரியர்களும் கரம் கோர்க்கும் பள்ளிகளில் இந்த வேலை பளு குறையவே செய்கிறது. ஆனால், இதற்கான தயாரிப்புகள் முடிந்து அர்ப்பணிப்பான தன்னார்வலர்கள் வகுப்புகளைத் தொடங்கிவிட்டால் நிச்சயம் ஆசிரியர்களின் வேலை பளு குறையவே செய்யும். நமது வாழ்க்கை வசதிகளுக்கு கைகொடுத்துவரும் இணையத்தின் பயன்பாட்டை பள்ளி சேவைக்கு கூடுதலாகப் பயன்படுத்துகிறோம் அவ்வளவே. இதிலுள்ள தொடர்பு சிக்கல்களால் பொறுமையிழப்பதும் நேராமல் இல்லை.

இல்லம் தேடிக் கல்விக்கு மாற்றுண்டா?

இல்லம் தேடிக் கல்விப் பணியோடு குழந்தைகளின் இடைவிலகலை கண்காணிக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கான ஆன்லைனில் வருகைப் பதிவு, அண்மைக்கால அசாதாரண நிகழ்வுகளால் கட்டிடங்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு என பலவகைகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் அழுத்தம் அதிகமாவது கண்கூடு. பல இடங்களிலும் இப்பணிக்காக அர்ப்பணிப்புடன் வரும் தன்னார்வலர்களின் ஆர்வத்தைக் கணக்கில் கொண்டு அவர்களை சரியான முறையில் வழிநடத்தினால் கல்வித்துறை மீள இது ஒரு நல்வாய்ப்பாகவே அமையும்.

இல்லம் தேடிக் கல்வியினை செயல்படுத்தும்போது கிடைக்கும் நல்ல படிப்பினைகளை கல்வித்துறை கவனத்தில் கொள்ளும் என்றே நம்புவோம். இதில் இருக்கும் சிறு சிறு குறைகளை ஊதிப்பெரிதாக்குவோர் தமிழகம் முழுமைக்குமான இதனைவிடச் சிறப்பான முன்மொழிவை அளிக்கும் பட்சத்தில் கல்வித் துறை செவிசாய்க்கவே செய்யும். அதனைவிடுத்து இருட்டு இருட்டு என்று புலம்பிக்கொண்டிருப்போர், கையிலுள்ள விளக்கைக் கிடைக்கும் தீக்குச்சி கொண்டு ஏற்றுங்களேன். அதன் மூலம் சிறிதளவாவது அறிவொளி பரவட்டும். அறிவு மட்டுமே ஏற்றத்தாழ்வின்றி அனைவரையும் முன்னேற்றும்.

கட்டுரையாளர்: மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். ’குழந்தை மொழியும் ஆசிரியரும்’, ‘முயலும் ஆமையும்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE