பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அவசியமா?

By எஸ்.எஸ்.லெனின்

தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டது, அதிகரித்த மழை விடுமுறை, தேங்கி கிடக்கும் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள், நெருங்கும் தேர்வுகள் ஆகியவற்றின் மத்தியில், தற்போது தமிழக பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அரையாண்டு விடுமுறை (டிச.25 - ஜன.2) அவசியம்தானா என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தின் பள்ளிகளுக்கு, வழக்கமாக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் அடுத்து வரும் புத்தாண்டு ஆகியவற்றை இணைத்து, அரையாண்டு விடுமுறை விடப்படும். முன்னதாக அரையாண்டு தேர்வு முடிந்திருக்கும் என்பதால், மாணவர்களுக்கான விடுமுறை பொருளோடு அமைவதோடு, விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்கான அவகாசத்தையும் இந்த விடுமுறை ஆசிரியர்களுக்கு வழங்கும்.

ஆனால், தற்போது அரையாண்டு தேர்வு என்ற ஒன்றே ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், அதன் பெயரிலான விடுமுறை அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெருந்தொற்றுப் பரவல் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்துள்ளன. அதிலும், சுழற்சிமுறை ரத்தாகி, பெருந்தொற்றுக்கு முந்தைய வழக்கத்துக்கு தற்போதுதான் உத்தரவாகி உள்ளன. இதற்கிடையே கனமழை காரணமாக தமிழகம் நெடுகப் பல்வேறு மாவட்டங்களிலும் கூடுதல் நாட்கள் விடுமுறை அறிவிப்புக்கு ஆளாகின. இதனால் தடைபட்டிருந்த பள்ளிகளின் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளில் மீண்டும் தடங்கல்கள் ஏற்பட்டன.

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, திருப்புதல் தேர்வுகளாக அவை அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், நடைபெறாத அரையாண்டு தேர்வின் பெயரால் விடுமுறை அறிவிப்பது தேவையா என தனியார் பள்ளிகள் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம், முதன்மை மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, பெற்றோர் மத்தியில் தனியார் பள்ளிக்கான தெரிவுகள் தீர்மானமாகும் என்பதால், தங்கள் அடைவை தக்க வைத்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் வேலை நாட்கள் அவசியமாகின்றன.

இதன்பொருட்டு, சுழற்சிமுறையை கடைபிடிக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தபோதும், பெரும்பாலான பள்ளிகள் வழக்கம்போலவே செயல்பட்டதோடு, பொதுத்தேர்வுக்கான மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் மற்றும் விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்தி வந்தன. தற்போதைய அரையாண்டு விடுமுறை அறிவிப்பால் தங்கள் செயல்பாடுகளில் தேக்கம் ஏற்பட்டுவிடும் என தனியார் பள்ளிகள் அஞ்சுகின்றன.

இதன் மறுபக்கமாய், மாணவர் நலன் சார்ந்து இந்த அரையாண்டு விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழிக்கலாம். நெல்லை சாஃப்டர் பள்ளியின் கழிவறைச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து, தமிழகம் முழுக்க பள்ளிக் கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 100 கட்டிடங்கள் வரை சிதிலமான சூழலிலும், உறுதித்தன்மை கேள்விக்குள்ளான நிலையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வந்த சூழலில், அந்தக் கட்டிடங்களை இடிப்பது சவாலான காரியமாக இருந்தது. தற்போதைய அரையாண்டு விடுமுறையில், உறுதித்தன்மையற்ற கட்டிடங்களை இடிக்கும் பணியை அரசு துரிதமாகச் செயல்படுத்தலாம். மேலும் தேவையான கட்டிடப் பராமரிப்பு, ஆய்வு உள்ளிட்ட மாணவர் நலன்காக்கும் பணிகளையும் மேற்கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE