போக்சோவில் ஆசிரியர் கைது

By கரு.முத்து

நாமக்கல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை புகார் சுமத்தப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக, ஆசிரியர்கள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தியபோதும்கூட அந்தப் போராட்டத்தைப் புறந்தள்ளி, அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின்கீழ் இன்று காலை கைது செய்திருக்கிறது காவல் துறை.

போராட்டத்தில் பெண் ஆசிரியர்கள்

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிவாணன் (52) என்பவர், ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரும், அவரது பெற்றோரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேற்று(டிச.6) காலை நேரில் சென்று பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட ஆசிரியர் தன்னிடம் தவறான முறையில் நடக்க முயற்சிக்கிறார். அவர் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்நிலையில் மாணவி எழுப்பியுள்ள புகாரில் உண்மையில்லை எனவும், உள்நோக்கத்தோடு ஆசிரியர்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் 35 பேரும் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைக் கேள்வியுற்ற பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இணைந்தனர்.

உள்ளிருப்புப் போராட்டம்

அதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். இந்நிலையில் இன்று(டிச.7) காலை ஆசிரியர் மதிவாணனை, போக்சோ சட்டத்தின்கீழ் நாமக்கல் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆசிரியர்களின் போராட்டத்தைப் புறந்தள்ளி, புகாருக்கு உள்ளான ஆசிரியரை கைது செய்த நாமக்கல் போலீஸாரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

ஆனால், அதேநேரம் நேற்று காலையில் கொடுக்கப்பட்ட இந்தப் புகாரில் எவ்வித விசாரணையும் நடத்தப்படாமலேயே, அவசர அவசரமாக இன்று காலை அந்த ஆசிரியரைக் கைது செய்திருப்பது என்ன நியாயம்? பொய்யாக கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்து, ஆராய்ந்து அதன் பின்னரே போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா என்று கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள், இதுகுறித்து தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE