ஒமைக்ரான்: மீண்டும் ஆன்லைன் கல்விக்கு ஆளாக்குமா?

By காமதேனு

கரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பரவல், உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இயல்பு நிலைக்குத் திரும்பிவந்த நாடுகள், மீண்டும் நத்தைபோல ஒடுங்கி வருகின்றன.

மற்ற எவரையும் விட, மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் குழந்தைகளை மையமிட்டு, இந்தப் புதிய திரிபு தொடர்பான கவலைகள் எழுந்துள்ளன. ஒமைக்ரான் கூப்பாடுகளுக்கு முன்னரே, நாடு முழுக்கப் பல்வேறு கல்வி நிலையங்களில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிக்கூடங்கள் அடைக்கப்படுவதும், திறக்கப்படுவதுமாய் தடுமாறி வந்தன. ஆனபோதும், தடுப்பூசிகள் முழுமையாக சென்று சேர்ந்ததாலும், பரவல் கண்ணிகள் அறுபட்டதாலும், குழந்தைகளின் இயல்பான நோயெதிர்ப்புச் சக்தி காரணமாகவும், பாதிப்பின் எண்ணிக்கை என்னவோ மிகவும் குறைவாகவே இருந்தது.

ஒன்றரை ஆண்டுகளாக பள்ளியைப் பார்க்காத குழந்தைகள், மீண்டும் நிஜமான வகுப்பறைச் சூழலில் தங்கள் கல்வியைப் பெற ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியும், பள்ளி மாணவர்கள் மத்தியில் தனிநபர் இடைவெளி இல்லாதது, கூட்ட நெரிசலான பேருந்துகளில் பயணிப்பது, முகக்கவசம் அணிவதில் அலட்சியம் என சவாலான போக்குகளும் பள்ளி செல்லும் குழந்தைகள் மத்தியில் காணப்படுகின்றன. இவற்றைச் சமாளித்தே பள்ளிச்செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

இந்தச் சூழலில் புதிய சவாலாக ஒமைக்ரான் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இதன் பரவல் வேகம் அதிகம் என்பதும், புதிய பிறழ்வுகள் அதிகரித்து வருவதும், தடுப்பூசிகளைப் பார்க்காத குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலையைக் கூட்டியுள்ளது. இதனால் மீண்டும் பள்ளிக்கூடங்கள் கதவடைப்பும், ஆன்லைன் கல்விக்கும் திரும்பும் சாத்தியங்கள் குறித்துமாகப் பல்வேறு கவலைகளில் பெற்றோர் ஆழ்ந்துள்ளனர்.

தற்போது கனமழை காரணமாக பள்ளிகளின் செயல்பாடுகள் அவ்வப்போது தடைபட்டாலும், நேரடி வகுப்புகளின் தாக்கம் குழந்தைகள் மத்தியில் நேர்மறையான விளைவுகள் தருவதைப் பார்க்க முடிகிறது. தாமதமாகப் பள்ளி திறந்தது, மழை விடுமுறைகள் எல்லாவற்றுக்குமாய் சேர்த்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்குவது, முழுவீச்சில் பாடங்களும், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுவது எனப் பள்ளிக்கூடங்கள் தீவிர ஏற்பாட்டில் உள்ளன.

இவற்றின் மத்தியில், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பழைய டெல்டா மற்றும் கதவைத் தட்டும் ஒமைக்ரான் ஆகிய அச்சுறுத்தல்கள் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளுக்கு புதிய சவாலாக எழுந்துள்ளன.

அரசு என்ன செய்யப்போகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். பொறுப்பான பெற்றோராக/பெரியவர்களாக, குழந்தைகளின் பாதுகாப்பு அம்சங்களில் வீடுதோறும் கூடுதல் கவனம் காட்டுவோம். இதுவரையிலான படிப்பினைகளில் இருந்து பாடம் கற்போம். பள்ளிப் பிள்ளைகளின் பாடம் தடைபடாதிருக்க துணையாக நிற்போம்.

ஒமைக்ரானையும் கடந்து செல்வோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE