பாடநூலில் பாலியல் புகார் எண்கள்: அமைச்சர் உறுதி

By காமதேனு

தமிழகத்தின் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருவது, பள்ளிக் கல்வி துறைக்கு பெரும் சவாலான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அரசு, தனியார் என்ற பேதமின்றி, அனைத்துப் பள்ளிகளிலும் புற்றீசல் போல புகார்கள் எழுந்து வருகின்றன.

பள்ளி செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்புக்காகவும், அவர்களுக்கு உதவும் நோக்கிலும், தனிமை மற்றும் மன அழுத்தம் போக்கி தவறான முடிவுகளில் இறங்காது தடுக்கவும் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்த பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

முதல் கட்டமாக ஆசிரியர்கள் மத்தியில் அவர்களின் பொறுப்பு உணர்ந்து செயல்படவும், அனைத்து ஆசிரியர்களுக்கும் போக்சோ சட்டம் குறித்து விளக்கங்கள் அளிக்கவும், தலைமையாசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தை சீரிய முறையில் செயல்படுத்தவும் அவசியமான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்கான நடவடிக்கைகள் பள்ளி மனநல ஆலோசகர் மூலம் தரப்பட உள்ளன. பாலியல் புகார்களை விரைந்து உரியவர்களிடன் தெரிவிக்கவும், அச்சமோ தயக்கமோ இன்றி செயல்படவும் உரிய வழிகாட்டுதல்களும் தரப்படுகின்றன. அந்த வகையில், பாலியல் புகார்களை தெரிவிக்க வேண்டிய இலவச, அவசர உதவி எண்களை பாடநூல்களில் அச்சிடவும் பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதை உறுதிப்படுத்திய துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்து பாடப்புத்தகங்களிலும் பாலியல் புகார்களை முறையிடுவதற்கான, 1098 மற்றும் 14417 ஆகிய எண்கள் அச்சிடப்பட உள்ளன. இந்தக் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களின் பாடநூல்களில் அவை ரப்பர் ஸ்டாம்ப் கொண்டு சேர்க்கப்பட உள்ளன. அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் போக்சோ சட்டம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலியல் புகார்களால் பள்ளியின் பெயர் கெட்டுவிடுமோ என்ற தயக்கமின்றி தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE